இந்தியா

சோனியா காந்தி தொகுதியில் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

சோனியா காந்தி தொகுதியில் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

Rasus

காங்கிரஸ் கட்சியின் பராம்பரிய தொகுதியாக கருதப்படும் ரேபரேலி தொகுதிக்கு இன்று சென்ற பிரதமர் மோடி, அங்கு காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து பேசினார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி மக்களவைத் தொகுதி. காங்கிரஸ் கட்சியின் பராம்பரிய தொகுதியாக கருதப்படும் இத்தொகுதியில் தற்போது சோனியா காந்தி எம்.பி.யாக உள்ளார். நடைபெற்று முடிந்து ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், இன்று ரேபரேலி தொகுதிக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். வரும் மக்களவைத் தேர்தலை குறிவைத்து அவர் அங்கு சென்றுள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரேபரேலி தொகுதியில் ரூபாய் 1000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தும் பேசினார் பிரதமர் மோடி.

தற்போதைய பாஜக ஆட்சியின் நிர்வாகம் ஒரு குடுமபத்திற்கு மட்டுமில்லாமல் மில்லியன் கணக்கான மக்களுக்கு பதில் சொல்லும் என்றார். பாஜக ஆட்சியில் நம்முடைய பாதுகாப்புப் படையை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி அதனை விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடியதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, தற்போதைய அரசாங்கம், ஆயுதப் படை, உச்சநீதிமன்றம் என அனைத்துமே பொய் சொல்கிறது என காங்கிரஸ் நினைப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். அத்துடன் கும்பமேளாவை முன்னிட்டு கட்டுப்பாட்டு மையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். கங்கா பூஜையிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.

பிரதமர் மோடியின் தற்போதைய ரேபரேலி வருகையையொட்டி ஏற்கெனவே கடந்த வாரம் இந்தத் தொகுதியை உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.