இந்தியா

அவிநாசி பேருந்து விபத்து: பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி இரங்கல்.!

அவிநாசி பேருந்து விபத்து: பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி இரங்கல்.!

webteam

திருப்பூரில் நடைபெற்ற விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி ஆகியோர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில், எர்ணாகுளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரளா பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி வி‌பத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த 5 பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் மற்றும் தீயணைப்புத்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த பேருந்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் நடந்த விபத்தால் மனவேதனை அடைந்துள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்காக பிரார்த்திக்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள்’ என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய போது அவிநாவி விபத்துக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, ‘விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்ல அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். திருப்பூர், கோவை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்’ என தெரிவித்துள்ளார்.