இந்தியா

ஏலத்திற்கு வரும் பவானி தேவியின் வாள்

ஏலத்திற்கு வரும் பவானி தேவியின் வாள்

JustinDurai
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனையான பவானி தேவி பயன்படுத்திய வாள், ஏலத்திற்கு வரவுள்ளது.
அண்மையில் நிறைவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவின்போது தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி, இதே வாளை பிரதமருக்குப் பரிசாக அளித்தார். பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்களின் மின் ஏலத்தில் இந்த வாளும் இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2019-ஆம் ஆண்டு இதே போன்ற ஏலம் நடைபெற்றது. அதன் மூலம் அரசுக்குக் கிடைத்த ரூ. 15.13 கோடி முழுவதும் கங்கை நதியின் தூய்மை பணிக்காக நமாமி கங்கை திட்டத்திற்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை நமாமி கங்கை திட்டத்திற்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாளைப் பெற விரும்புவோர் pmmementos.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 7ஆம் தேதி வரை நடைபெறும் மின் ஏலத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தமது முதல் போட்டியில் வெற்றி பெற்று பவானி தேவி வரலாற்றில் இடம் பெற்றார். எந்த ஒரு இந்திய வாள் வீச்சு வீராங்கனையும் இத்தகைய நிலை வரை செல்லாததால் இது மிகப்பெரும் சாதனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.