pm modi pt web
இந்தியா

பிரதமரின் கன்னியாகுமரி வருகையும் பின்னணியும்... பலதரப்பட்ட கருத்துக்களால் கொதிக்கும் அரசியல் களம்!

PT WEB

மேற்குவங்கம், ஒடிசா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளில் வரும் ஜூன் 1 ஆம்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த சமயத்தில் அந்த மாநிலங்களைத் தேர்வு செய்யாமல், இறுதிகட்ட பரப்புரைக்குப்பின் கடைக்கோடியில் உள்ள கன்னியாகுமரிக்கு பிரதமர் வருகிறார். 2019 கேதார்நாத் போலவே, 2024 ல் கன்னியாகுமரி என்கிறது பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்கள். பிரதமர் ஆன்மிகவாதி என்பதால் அவரது வருகையில் அரசியல் கிடையாது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பா.கி. வலதுசாரி சிந்தனை கொண்டவர்களின் கருத்தும் இதையொட்டியே இருக்கிறது.

மூத்த பத்திரிக்கையாளர் பா.கி. இது குறித்து கூறுகையில், “இது ஒன்றும் புதிது அல்ல. நரேந்திர மோடி ஆன்மீகத்தில் பற்றுள்ளவர். தேர்தல் முடிவடையும் நிலையில், எடுத்துக் கொள்ளும் ஓய்வை ஆன்மீக வழியில் பயன்படுத்திக் கொள்கிறார்” என தெரிவித்துள்ளார்.

வலதுசாரி சிந்தனையாளரான அர்ஜூன மூர்த்தி இதுகுறித்து கூறுகையில், “பிரதமர் மோடியும் நரேந்திரர் என்ற பெயர் கொண்டவர். விவேகானந்தரும் நரேந்திரர் என்ற பெயர் கொண்டவர். அரசியல் செய்கிறார், சித்து விளையாட்டுகள் செய்கிறார் என்ற பலவிதமான கருத்துக்கள் உலவுகின்றன. கருத்து சுதந்திரம் உள்ள பூமியில் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால் என் பார்வையில் மோடியின் இந்த தியானத்தால் மிகப்பெரிய நன்மை நடக்கும்” என தெரிவித்தார்.

முழுக்க முழுக்க அரசியல்

ஆனால், ”தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா இதுவரை வலுவான இடத்தை பிடிக்காததால் பிரதமரின் வருகை, தொலைநோக்குத்திட்டத்துடன் கூடியதாக பார்க்கப்படுகிறது. 2024 மக்களவைத்தேர்தலில் பாஜக எத்தனை இடம் பிடிக்கப்போகிறது என்பது தெரியாத நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் 2029 நாடாளுமன்றத்தேர்தல் என பல அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். குறிப்பாக, ஜூன் 1 ஆம்தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடப்பதற்கு முன்பாக தியானம் செய்வதில் அரசியல்தான் இருக்கிறது” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர். கே. ராதாகிருஷ்ணன்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “தியானம் என்பது சாதியைச் சார்ந்த, மதத்தைச் சார்ந்த விஷயம் கிடையாது. ஆனால் இதை முழுக்க முழுக்க மதத்தைச் சார்ந்த விஷயமாக மாற்றிவிட்டார்கள். அது அரசியலுக்கு உதவுமா என பார்க்கின்றனர். தியானத்தை ஒன்றாம் தேதிக்கு பிறகு பண்ணலாம் அல்லது இப்போது கூட பண்ணலாம். ஏன் 1 ஆம் தேதி என்றால், அது லைவில் மக்கள் மத்தியில் போய்க்கொண்டே இருக்க வேண்டும். இதுதான் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் இதை தடுக்க வேண்டும். இதை செய்வது அரசியலுக்கும் ஓட்டுக்காகவும் தான்.

பிரதமர் தனது கன்னியாகுமரி வருகையில் தியானம் செய்யப்போவதாக அறிவித்துள்ளதால் அதன் பின்னணி ஆன்மிகமாக பார்க்கப்படுவதோடு, விவேகானந்தரின் தியானத்தோடு ஒப்பிட்டு நோக்கப்படும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. விவேகானந்தருக்கு திருப்பத்தை தந்த கன்னியாகுமரி, பிரதமர் மோடிக்கும் புதிய திருப்பத்தை கொண்டுவரும் என்பது பாரதிய ஜனதா வட்டாரங்களில் உள்ள நம்பிக்கை. அதே சமயம், பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சியமைத்தால் வடக்கு, தெற்கு என்ற வேறுபாடு இனி இருக்காது என்ற அண்ணாமலையின் கருத்தையும் ஒப்பு நோக்கவேண்டியிருக்கிறது. இதனால் வெறும் தியானம், ஆன்மிகம் மட்டுமின்றி அரசியல் கணக்குகளும் பிரதமரின் கன்னியாகுமரி பயணத்தில் மறைந்திருக்கின்றன என்பதில் ஐயமில்லை” என்றார்.