இந்தியா

“பணத்தை தருகிறேன்; திருடன் எனச் சொல்வதை நிறுத்துங்கள்” - விஜய் மல்லையா

“பணத்தை தருகிறேன்; திருடன் எனச் சொல்வதை நிறுத்துங்கள்” - விஜய் மல்லையா

rajakannan

தயது செய்து கடன் பெற்ற பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள், திருடன் எனச் சொல்வதை நிறுத்துங்கள் என்று விஜய் மல்லையா கூறியுள்ளார். 

இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் இருந்து பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தாமல் லண்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதுதொடர்பாக வங்கிகளின் சார்பாக லண்டன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. 

அப்போது மல்லையா நாடு கடத்தப்பட்டால் மும்பை சிறையில் அடைக்க வாய்ப்புள்ளதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. படுக்கை, மேற்கத்திய கழிப்பறை வசதிகள் கொண்ட சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறி அதற்கான புகைப்படங்களை சமர்ப்பித்தது. இந்தியா தெரிவிக்கும் வகையில் சிறையில் வசதிகள் இருக்காது என்று மல்லையா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், விஜய் மல்லையா இந்தக் கடன் விவகாரம் தொடர்பாக நேற்று முதல் பல்வேறு ட்விட்டர் பதிவுகளை செய்து வருகிறார். இதில் முக்கியமானதாக, வங்கிக்கடனை 100 சதவிகிதம் திருப்பிச் செலுத்தத் தயாராக இருப்பதாக அவர் திரும்ப திரும்ப குறிப்பிட்டுள்ளார். மேலும் தாம் திரும்ப செலுத்தும் கடன் தொகையை வங்கிகள் மற்றும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும், அதை வங்கிகள் ஏற்க மறுத்தால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று மட்டும் கேட்டுக் கொண்டார். 

மற்றொரு பதிவில், ‘கடந்த‌ 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரசின் கஜானாவை தமது கிங் ஃபிஷர் நிறுவனத்தின் லாபத் தொகை மூலம் நிரப்பியதாகவும், அந்த நிறுவனம் தற்போது நஷ்டத்தில் இருந்தாலும், முழுக்கடனை திருப்பிச் செலுத்த தாம் தயாராக இருப்பதாக’ விஜய் மல்லையா பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில், கடைசியாக பதிவிட்ட ட்விட்டர் பதிவில், பணத்தை திருப்பி செலுத்தும் முடிவை ஏன் இப்படி விமர்சிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “என்னுடைய பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நான் திருடிவிட்டதாக சொல்லப்படும் கதைகளை நிறுத்த விரும்புகிறேன்” என்றும் காட்டமாக கூறியுள்ளார்.