பில்கிஸ் பானு, உச்ச நீதிமன்றம் file
இந்தியா

காலநீட்டிப்பு வேண்டும்; பில்கிஸ்பானு வழக்கில் குற்றவாளிகள் கோரிக்கையும் நீதிமன்றத்தின் தீர்ப்பும்!

பில்கிஸ்பானு வழக்கில் குற்றவாளிகள் மீண்டும் சரணடைவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், காலநீட்டிப்பு வேண்டும் என குற்றவாளிகள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Angeshwar G

குஜராத்தில், கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது, வன்முறையாளர்கள் சிலரால் பில்கிஸ் பானு என்ற 21 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்நேரத்தில் அவர் 5 மாத கர்ப்பிணியாகவும் இருந்தார். அன்றைய தினம் பில்கிஸ் பானுவின் 3 வயது மகள், அவரது குடும்பத்தினர் உட்பட 14 பேர் பில்கிஸ் பானு கண்முன்னேயே படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

supreme court

பின்னர் இதுதொடர்பான வழக்கில் 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2008-ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பின் அதனை மும்பை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. அப்படி ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்த 11 குற்றவாளிகளும், 10-15 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு நன்னடத்தையின் அடிப்படையில் குஜராத் அரசு அவர்களை விடுதலை செய்தது. இவர்களுடைய விடுதலைக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இந்த முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் பல்வேறு தரப்பினர் இத்தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்குகளை உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா தலைமையிலான அமர்வு விரிவான விசாரணை செய்து வந்த சூழலில், கடந்த ஆண்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர். இந்தச் சூழலில் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

விடுதலை தொடர்பாக தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், “தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான உத்தரவை பிறப்பிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. குஜராத் அரசின் முடிவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள். அவர்களின் மரியாதை மிகவும் முக்கியம். பெண்கள் மரியாதைக்குரியவர்கள்” எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், “முன்விடுதலை செய்யப்பட்ட 11 பேரும், அடுத்த 2 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும்” என உத்தரவிட்டது.

இந்நிலையில் குற்றவாளிகளில் 5 பேர் சரணடைவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புக்கொண்டது. குற்றவாளிகள் மூவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிதம்பரேஷ், நீதிபதி நாகரத்னா தலைமையிலான அமர்வில் ஆஜராகி, இந்த வழக்கை ஜனவரி 19-ஆம் தேதிக்கு பட்டியலிடுமாறு கேட்டுக்கொண்டார். குற்றவாளிகள் சரணடைவதற்கான காலக்கெடு ஜனவரி 21-ஆம் தேதி முடிவடையும் நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்தவர்களில் ஒருவரான கோவிந்தபாய் நை, தனது தந்தைக்கு 88 வயதும் தாயாருக்கு 75 வயதாவதாகவும், தனது பெற்றோர் இருவரும் தன்னை நம்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

court order

மற்றொருவரான ரமேஷ் ரூபாபாஸ் சந்தனா, தனது மகனின் திருமணத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். மிதேஷ் சிமன்லால்பட், விளைபொருட்கள் அறுவடைக்கு தயாராக இருப்பதாகவும் சரணடைவதற்கு முன் அப்பணிகளை முடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மற்ற இருவர் தங்களது உடல்நிலைகளை காரணம்காட்டின் சரணடைவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

நீதிபதி நாகரத்னா, அனைத்து மனுக்களையும் நாளை ஒன்றாக பட்டியலிடுவதற்கு தலைமை நீதிபதியிடம் இருந்து உத்தரவுகளைப் பெற பதிவேட்டாளர்களிடம் உத்தரவிட்டுள்ளார்.