இந்தியா

“டிச.14-ல் பாஜக அலுவலகங்களில் முற்றுகை போராட்டம்” - டெல்லியில் விவசாயிகள் அறிவிப்பு

“டிச.14-ல் பாஜக அலுவலகங்களில் முற்றுகை போராட்டம்” - டெல்லியில் விவசாயிகள் அறிவிப்பு

EllusamyKarthik

டிசம்பர் 14-இல் பாஜக அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து அகில இந்திய அளவிலான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. 

அதே நேரத்தில் மத்திய அரசும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையும் தொடர்ந்தது. இருப்பினும் அதில் இருதரப்புக்கும் இடையே சுமூக தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.

இந்தச் சூழலில் வரும் டிசம்பர் 14 ஆம் தேதி அன்று பாஜக அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அந்தப் பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் தங்கள் நிலைகளில் உறுதியாக இருந்தனர். சட்டங்களை திருத்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை விவசாயிகள் ஏற்க மறுத்து, சட்டத்தை முழுமையாக ரத்துசெய்ய கோரிக்கை வைத்தனர். எனவே மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமருடன் இன்று நடைபெறவிருந்த விவசாயிகள் தலைவர்களின் ஆறாவது கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, மூன்று வேளாண் சட்டங்கள் ஒருபோதும் திரும்பப் பெறப்படமாட்டாது என்றும் வேண்டுமானால் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் மத்திய அரசு, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கூறியதாக தகவல் வெளியானது.

ஆனால். இந்தச் சட்டத்திருத்தங்கள் எங்களுக்குத் தேவையில்லை, அரசு கூறியதையே மீண்டும் மீண்டும் கூறி வருவதாக விவசாய பிரதிநிதிகள் அதிருப்தி வெளியிட்டனர். இதன் தொடர்ச்சியாகவே, டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். இதையொட்டியே, பாஜக அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.