இந்தியா

"பல வெடிகுண்டு தாக்குதல்களுக்கு திட்டமிட்டேன்" - மேகாலயா பிளஸ் 2 மாணவன் திடுக் வாக்குமூலம்

"பல வெடிகுண்டு தாக்குதல்களுக்கு திட்டமிட்டேன்" - மேகாலயா பிளஸ் 2 மாணவன் திடுக் வாக்குமூலம்

webteam

மேகலாயாவில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 17 வயது பிளஸ் 2 மாணவன் அளித்துள்ள வாக்குமூலம் போலீஸாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பல இடங்களில் தனி ஆளாக வெடிகுண்டு தாக்குதல்களை நடத்த அவன் திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள போலீஸ் பஜார் பகுதியில் கடந்த 30-ம் தேதி பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அன்றைய தினம் சந்தைப் பகுதிகளில் மக்கள் நெரிசல் மிகக் குறைவாகவே இருந்ததால், இந்த குண்டுவெடிப்பில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவனை பிடித்து விசாரித்தனர். இதில், அந்த சிறுவன் தடை செய்யப்பட்ட எச்என்எல்சி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும், தீவிரவாதிகளின் உத்தரவின் பேரில் போலீஸ் பஜார் பகுதியில் வெடிகுண்டு வைத்ததும் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், அந்த சிறுவன் போலீஸாரிடம் திடுக்கிடும் வாக்குமூலத்தை இன்று அளித்துள்ளான். அதன்படி, ஷில்லாங்கின் பல்வேறு பகுதிகளில் தனியொரு ஆளாக வெடிகுண்டு தாக்குதல்களை நடத்த, தான் திட்டமிட்டதாக அவன் கூறியுள்ளான். மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லைதியும்கிரா நகரில் சக்திவாய்ந்த வெடிகுண்டை வைக்க தான் சென்றதாக கூறிய அவன், திடீரென அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் அங்கிருந்து திரும்பிவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறான்.

அவனது வாக்குமூலங்களை பதிவு செய்த போலீஸார், அவனுடன் தொடர்பில் இருந்த தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். மேகாலயாவை பொறுத்தவரை, எச்என்எல்சி தீவிரவாத இயக்கம் அதிக அளவில் சிறுவர்களை தங்கள் அமைப்பில் சேர்த்து அவர்களுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்கி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.