தம்மை போலி என்கவுண்டரில் கொல்லச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார். அகமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா நேற்று அகமதாபாத்தில் காணாமல் போனதாக தகவல் வந்தது. ஆனால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தொகாடியா, சர்க்கரை குறைபாடு காரணமாக மயக்கமடைந்தால் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டதாக விளக்கமளித்தார். மேலும் தம்மை போலி என்கவுண்டரில் கொல்லச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
ராமர் கோயில், விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள், பசுவதைச் சட்டம் உள்ளிட்டவை தொடர்பாக பேச தமக்கு ராஜஸ்தான் போலீசார் தடை விதித்ததாகவும் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் தம் மீது எந்த வழக்கும் இல்லாத நிலையில் போலியான வழக்கு ஒன்றில் சிக்கவைத்து என்கவுண்டரில் கொல்லச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார். இதற்காக தம்மை கைது செய்ய ராஜஸ்தான் போலீஸார் முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே, கொலைச் சதி தொடர்பாக பிரவீன் தொகாடியாவின் குற்றச்சாட்டு முக்கிய பிரச்னை என்று கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, அதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.