இந்தியா

பிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகர் பி.கே.சின்ஹா ராஜினாமா?!

பிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகர் பி.கே.சின்ஹா ராஜினாமா?!

webteam

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை ஆலோசகர் பி.கே.சின்ஹா ராஜினாமா செய்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1977-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச கேடரின் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சின்ஹா, செப்டம்பர் 2019 முதல் பிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகராக பணியாற்றி வந்தார்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) தலைமையிலான அரசாங்கத்தில் சின்ஹா மூன்று மத்திய அமைச்சகங்களில் செயலாளராக பணியாற்றினார். 2014-ல் மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர், மின் செயலாளராக தக்கவைக்கப்பட்டார்.

மோடி அரசாங்கத்தின் முதல் ஆண்டில் - மத்திய மின் அமைச்சகத்தின் உயர் அதிகாரியாக சின்ஹா இருந்தபோது, இந்தியா 22,566 மெகாவாட் திறன் சேர்த்தல் மற்றும் ஒலிபரப்பு வரிசையில் இதுவரை இல்லாத அளவுக்கு மின்சாரம் அதிகரிப்பு பதிவு செய்தது.

ஜூன் 2015-ல், சின்ஹா அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜூன் 2019-ல் அவரது பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், அவருக்கு மூன்றாவது நீட்டிப்பு வழங்கப்பட்டது, இதனால், அவர் மிக நீண்ட காலம் அமைச்சரவை செயலாளராக இருந்தார். ஓய்வுபெற்ற அதிகாரியான நிருபேந்திர மிஸ்ராவுக்கு பதிலாக இவர் பதவி பெற்றார்.

2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பி.எம்.ஓ-வை விட்டு வெளியேறிய மிக உச்சபட்ச அதிகாரம் கொண்ட அதிகாரியாக சின்ஹா கருதப்படுகிறார். மிஸ்ரா மற்றும் சின்ஹா இருவரும் பிரதமர் அலுவலகத்தில் பிரதமருக்கு மிகவும் நம்பகமான அதிகாரிகளாக கருதப்பட்டனர்.

முன்னதாக, முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்ட பணி ஆணையில் மோடியின் பதவிக்காலம் அல்லது மேலதிக அறிவிப்பு வரும் வரை, சின்ஹா பதவியில் தொடர்வார் எனக் குறிப்பிடத்தப்பட்டிருந்தது.

மோடி தலைமையிலான அரசாங்கத்தின் மிக மூத்த அதிகாரத்துவங்களில் ஒருவராக இருந்த பி.கே.சின்ஹா தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.