இந்தியா

மூதாட்டியை கொன்ற 'பிட்புல்' நாய் மீண்டும் உரிமையாளரிடமே ஒப்படைப்பு

மூதாட்டியை கொன்ற 'பிட்புல்' நாய் மீண்டும் உரிமையாளரிடமே ஒப்படைப்பு

ஜா. ஜாக்சன் சிங்

உத்தரபிரதேசத்தில் மூதாட்டியை கடித்துக் கொன்ற பிட்புல் நாய் மீண்டும் அதன் உரிமையாளரிடமே ஒப்படைக்கப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் அமித். அங்குள்ள பல ஜிம்களில் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார். அமித் தனது வீட்டில் பிட்புல் வகை நாயை வளர்த்து வந்தார். மிகவும் ஆபத்தானதாக கருதப்படும் பிட்புல் நாயை வீட்டில் வைத்து வளர்க்க வேண்டாம் என அக்கம்பக்கத்தினர் கூறிய போதிலும் அதனை அமித் சட்டை செய்யவில்லை.

இந்த சூழலில், கடந்த 12-ம் தேதியன்று காலை வழக்கம் போல அமித், ஜிம்முக்கு சென்றுவிட்டார். அப்போது அவரது தாயார் சுஷிலா திரிபாதி (82), துணிகளை உலர வைப்பதற்காக மொட்டை மாடி சென்றார். அந்த சமயத்தில், அங்கிருந்த பிட்புல் நாய் திடீரென ஆக்ரோஷமாக மாறி சுஷிலா மீது பாய்ந்து முகம், கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் கடித்து குதறியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறியுள்ளார். ஆனால், வீட்டின் கதவு உள் பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் அக்கம்பக்கத்தினரால் வீட்டுக்குள் செல்ல முடியவில்லை.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்த அமித், வீட்டுக்கு வந்து பார்த்த போது சுஷிலா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அமித் கொண்டு சென்றுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி சுஷிலா உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, அந்த நாயை அமித் லக்னோ மாநகராட்சியிடம் ஒப்படைத்தார். பின்னர், அதன் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அது விலங்குகள் மையத்தில் விடப்பட்டது. 14 நாள் கண்காணிப்பில் அந்த நாயிடம் எந்தவித ஆக்ரோஷமும், அசாதாரண நடவடிக்கையும் வெளிப்படவில்லை என விலங்குகள் மையம் சான்றளித்தது. இதன் காரணமாக, அந்த பிட்புல் நாயை தத்தெடுப்பதற்கு பலரும் போட்டிப் போட்டனர்.

எனினும், அமித் மீண்டும் நாயை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்தார். முறையான நாய் பயிற்சியாளரிடம் நாயை பயிற்சிக்கு அனுப்புவதாகவும் அவர் உறுதியளித்தார். இதன்பேரில், மீண்டும் அமித்திடமே பிட்புல் நாய் ஒப்படைக்கப்பட்டது.