இந்தியா

பிட்புல் நாய் வளர்க்கத் தடை: மீறினால் அபாரதம் - எந்த மாநிலத்தில் தெரியுமா?

பிட்புல் நாய் வளர்க்கத் தடை: மீறினால் அபாரதம் - எந்த மாநிலத்தில் தெரியுமா?

JustinDurai

பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில், பிட்புல் உள்ளிட்ட 3 வகை நாய்களை வளர்க்க காஜியாபாத்தில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் பிட்புல் இன நாய்கள் சமீபகாலமாக மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் இந்த வகை நாய் வளர்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் காஜியாபாத் நகர எல்லைக்குள் பிட்புல், ராட்வீலர் மற்றும் டோகோ அர்ஜென்டினோ ஆகிய 3 இன நாய்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் காஜியாபாத் மாநகராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து காஜியாபாத் மேயர் ஆஷா ஷர்மா கூறுகையில், "மாநகராட்சி எல்லைக்குள் பிட் புல், ராட்வீலர் மற்றும் டோகோ அர்ஜென்டினோ ஆகிய 3 வகை நாய்களை வளர்க்க இனி அனுமதியோ, உரிமமோ வழங்கப்படாது. பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த வகை நாய்களை வளர்க்க மாநகராட்சி நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. அதையும்மீறி இந்த நாய்களை வாங்கி வளர்த்தால் அபராதம் விதிக்கப்படும். பிட் புல், ராட்வீலர் மற்றும் டோகோ அர்ஜென்டினோ அல்லாத மற்ற வகை நாய்களை வளர்க்க விரும்புவோர் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டாயமாக லைசென்ஸ் பெற வேண்டும். இது நவம்பர் 1 முதல் வழங்கப்படும். மேலும் ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட நாய்களை வளர்க்கக் கூடாது. பொதுவெளியில் நாயை அழைத்துச் செல்பவர்கள் நாயின் வாயை மூடும் உறையை அதற்கு அணிய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உத்தரப்பிரதேசத்தின் கான்பூர், ஹரியானாவின் பஞ்ச்குலா ஆகிய மாநகராட்சி நிர்வாகங்கள், பிட்புல் மற்றும் ராட்வீலர் இன நாய்களை நகர எல்லைக்குள் செல்லப்பிராணிகளாக வளர்க்க தடை விதித்தன. அந்த வரிசையில் தற்போது  காஜியாபாத் மாநகராட்சியிலும் பிட்புல் உள்ளிட்ட 3 இன நாய்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்க:  இந்தியாவில் தொடரும் பிட் புல் நாய் தாக்குதல்! பெண் ஒருவருக்கு தலை, கை, கால்களில் 50 தையல்!