இந்தியா

இந்திய வானிலை மையத்தை பாராட்டிய ஐநா பேரிடர் குழு

இந்திய வானிலை மையத்தை பாராட்டிய ஐநா பேரிடர் குழு

webteam

இந்திய வானிலை ஆய்வு மையத்தை ஐநாவை சேர்ந்த பேரிடர் குறைப்பதற்கான குழு பாராட்டியுள்ளது.

ஒடிசாவை புயல் தாக்கப் போகிறது என்ற தகவல் தெரிந்தவுடன் அதன் பாதை மற்றும் வேகம் குறித்து வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக அம்மாநில அரசுக்கு தகவல்களை தந்து கொண்டிருந்த‌து. வானிலை மையங்களில் உள்ள அதிநவீன தொழில்நுட்ப வசதியை கொண்டும், செயற்கை கோள் எடுத்து அனுப்பிய புகைப்பட மாதிரிகளை கொண்டும் புயலை முன்கூட்டியே கணித்தது மிகச் சரியாக அமைந்தது. 

இதனால் உஷாரான ஒடிசா அரசு 12‌ லட்ச‌ம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றது. இந்தியாவில் ஒரு சில நாட்களில் இவ்வளவு அதிகம் மக்கள் வெளியேற்றப்பட்டது இதுவே முதல் முறையாகும். வானிலை மையத்தின் எச்சரிக்கை தகவல்‌களை அரசு நிர்வாகம் மிகச் சிறப்பாக கடலோரம் வசிப்பவர்களுக்கும் கடலில் மீன் பிடிக்கச் சென்றவர்களுக்கும் மற்றும் செல்ல இருந்தவர்களுக்கும் கொண்டு சென்று சேர்த்திருந்தது. 

இந்நிலையில் இந்தியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஐநா பேரிடர் குறைப்பதற்கான குழு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐநாவின் பேரிடர் குறைப்பு குழுவின் சிறப்பு அதிகாரி மாமி மிஷூடோரி, “இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு மிகவும் துள்ளியமாக இருந்தது. அதனால் ஃபோனி புயலால் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. அத்துடன் வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கை தகவலும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற உதவியாக இருந்தது. 

மேலும் இந்த முயற்சி இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் திறனை இந்தியா சரியாக செயல்படுத்தி வருவதையே காட்டுகிறது. அத்துடன் இந்தியா சென்டாய் ஒப்பந்தத்தை சிறப்பாக செயல்படுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது” எனக் கூறியுள்ளார். ஒடிசாவில் கரையைக் கடந்த ஃபோனி புயலில் இதுவரை 8 பேர் உயிரிழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.