இந்தியா

கேரள முதல்வராக மே 20-ல் பதவியேற்கிறார் பினராயி விஜயன்; 21 அமைச்சர்களும் பதவியேற்பு

கேரள முதல்வராக மே 20-ல் பதவியேற்கிறார் பினராயி விஜயன்; 21 அமைச்சர்களும் பதவியேற்பு

sharpana


கேரள முதல்வராக மே 20-ஆம் தேதி பதவியேற்கிறார் பினராயி விஜயன். அவரது அமைச்சரவை குறித்த விவரங்களும் வெளியாகி இருக்கின்றன.

அண்மையில் கேரள மாநில சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் சி.பி.எம் கட்சி தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து இரண்டாம் முறையாக தொடர்ந்து ஆட்சிக் கட்டிலை தக்கவைத்துக்கொண்டது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளில் எல்.டி.எஃப் கூட்டணியும், மீதமுள்ள 41 தொகுதிகளை காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணியும் கைப்பற்றின.

கடந்த மே 2-ம் தேதியே வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானாலும் அடுத்த அரசு இன்னும் பதவியேற்காமல் இருந்து வந்தது. குறிப்பாக பினராயி விஜயன் தான் அடுத்து முதல்வர் என்றாலும், கட்சிக் கூட்டம் தீர்மானிக்கும் வரை அவர் பதவியேற்க மாட்டார் என்று கூறப்பட்டது.

அதன்படி, திருவனந்தபுரத்தில் ஆளும் எல்.டி.எஃப் கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டார். தேர்தலின்போது ஒதுங்கியிருந்த சிபிஎம் மாநில செயலாளர் கொடியேரி பாலகிரூஷ்ணன் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தக் கூட்டத்தின் மூலம் கட்சி நடவடிக்கைகளில் கலந்துகொண்டார்.

இந்தக் கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த எல்.டி.எஃப் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், ``மீண்டும் முதல்வர் பினராயி விஜயன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார். வரும் 20-ம் தேதி இதற்கான பதவியேற்பு விழா நடைபெறும்.

இந்த முறை 21 அமைச்சர்களுடன் பினராயி விஜயன் பதவியேற்றுக்கொள்வார். சி.பி.எம்-க்கு 12, சி.பி.ஐ-க்கு 4, ஜனதாதளம் எஸ், கேரள காங்கிரஸ் எம், என்.சி.பி ஆகிய கட்சிககுக்கு தலா ஒரு இடம் என அமைச்சர் பதவி பிரித்து வழங்கப்படும். மீதம் உள்ள இரண்டு அமைச்சர் பதவிகள் நான்கு கட்சிகளுக்கு தலா இரண்டரை ஆண்டுகள் வீதம் ஒதுக்கப்படும்.

அமைச்சர்களுக்கான துறை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதனை முதல்வர் பினராயி விஜயன் இறுதி செய்வார். சபாநாயகர் பதவி சி.பி.எம்-க்கும், துணை சபாநாயகர் பதவி சி.பி.ஐ-க்கும் வழங்கப்படும்" என்றார்.

ஏற்கெனவே வெளியான தகவலின்படி, இந்த முறை அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் இந்த முறை கூட்டணி கட்சிக் கூட்டத்தில் அமைச்சரவையை இறுதி செய்யாமல், அந்தப் பொறுப்பு இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்கும் பினராயி விஜயனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது என்று மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையே, நாளை எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.