இந்தியா

பினராயி வசம் சிறுபான்மையினர் துறை; முஸ்லிம் அமைப்புகள் அதிருப்தி - 'பின்னணி' வியூகம் என்ன?

பினராயி வசம் சிறுபான்மையினர் துறை; முஸ்லிம் அமைப்புகள் அதிருப்தி - 'பின்னணி' வியூகம் என்ன?

நிவேதா ஜெகராஜா

கேரள அரசியலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் சிறுபான்மையினர் விவகார இலாகாவை தன் வசம் வைத்துக்கொண்டதற்கு பின்னணியில் ஓர் அரசியல் உத்தி உள்ளதாக சொல்கிறார்கள், அக்கட்சியின் தோழர்கள். அந்தப் பின்னணியை விரிவாக பார்ப்போம்.

கேரளாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் பினராயி விஜயனே ஆட்சியை தக்கவைத்துள்ளார். இதன்மூலம் தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சியை பிடித்திருக்கும் பெருமையை அவர் பெற்றுள்ளார். 40 ஆண்டு கால கேரள அரசியலில் ஒரு கட்சி தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வருவது இதுவே முதன்முறை. இதையடுத்து நேற்றுமுன்தினம் 20 அமைச்சர்களுடன் உடன் தனது கேபினெட்டின் 2.0-வை ஆரம்பித்தார். இந்த முறை அமைச்சர்கள் அனைவருக்கும் துறைகளை தனிப்பட்ட முறையில் ஒதுக்கீடு செய்தது பினராயி விஜயன்தான்.

இதில் யாரும் எதிர்பாராத விதமாக பினராயி விஜயன் இந்த முறை சிறுபான்மையினர் துறையை தன் வசம் வைத்துக்கொண்டார். இதற்கு முந்தைய காலங்களில் சிறுபான்மை நலத்துறை பெரும்பாலும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நபர்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்தது. இந்த அரசாங்கத்தின் கடந்த ஆட்சியில் சிறுபான்மையினரின் நலத்துறையை உயர் கல்வி அமைச்சராக இருந்த கே.டி.ஜலீல் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்தில், இந்த இலாகாவை இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு கொடுக்கப்பட்டு மஞ்சலம்குழி அலி அதன் அமைச்சராக இருந்தார்.

இந்தமுறையும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இந்தத்துறை ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்டு வந்தது. அதன்படி, மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வி.அப்துர் ரஹ்மானுக்கு வழங்கப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக இந்த துறையை முதல்வர் பினராயி விஜயனே எடுத்துக்கொண்டார். இதற்கு ஒரு சில முஸ்லிம் அமைப்புகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. கேரளாவில் இருக்கும் மற்றொரு சிறுபான்மை சமூகமான கிறிஸ்தவ சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக பினராயி விஜயனால் செய்யப்பட்டது என்று இஸ்லாமிய சமூக மக்கள் நினைக்கிறார்கள்.

ஆனால், பினராயி எடுத்த இந்த முடிவு சிறுபான்மை சமூகங்களுடனான தனது உறவை வலுப்படுத்துவதற்கான ஓர் அரசியல் உத்தி என்று பரவலாகக் கூறப்படுகிறது. ஏனென்றால், இதற்கு முன்பு சிறுபான்மை துறை அமைச்சர்களாக இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களே இருந்ததால், சிறுபான்மை விவகாரங்கள் துறை முஸ்லிம் சமூகத்தின் நலனில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக கிறிஸ்தவ மக்களில் ஒரு பகுதியினர் தேர்தலுக்கு முன்பிருந்தே கவலைகளை வெளிப்படுத்தவந்தனர். கேரள கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தினர் இதுதொடர்பாக முதல்வர் பினராயி விஜயனுக்கு வெளிப்படையாகவே கடிதம் எழுதியிருந்தனர்.

அதில், இந்த முறை சிறுபான்மைத் துறை அமைச்சர் பதவி, ஒரு கிறிஸ்தவ நபருக்கு வழங்கப்பட வேண்டும். இல்லையென்றால் முதல்வரே அதனை வைத்துக்கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தனர். இதையடுத்தே இரு சமூகங்களையும் சமாதானம் செய்யும் நடவடிக்கையாக இந்த துறையை பினராயி விஜயன் தன் வசம் வைத்துக்கொள்ளும் முடிவுக்கு வந்தார் என சிபிஎம் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கிடைய, "சிறுபான்மைத் துறையை நான் தக்கவைத்துக்கொள்வதற்கான முடிவு கிறிஸ்தவ மக்கள் விடுத்த கோரிக்கை அல்லது விருப்பத்தின் படி எடுக்கப்படவில்லை. ஒருமித்த கருத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த முடிவை அனைத்து சிறுபான்மை சமூகங்களும் வரவேற்க வேண்டும்.

எந்தவொரு குறிப்பிட்ட பிரிவினரின் நலனில் மட்டுமே இந்த துறை இதுவரை கவனம் செலுத்தியுள்ளதற்கு எந்த காரணமும் இல்லை. முஸ்லீம் சமூகம் ஒரு சிறுபான்மையினர் சமூகம் தான். அவர்கள் என் மீதும் எல்.டி.எஃப் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால் எனது முடிவை விமர்சிக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மட்டும் அந்த சமூகத்தின் ஒட்டுமொத்த உரிமை கொண்டிருக்கவில்லை" என்று முன்னதாக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பி கே குன்ஹாலிக்குட்டி இதுதொடர்பாக விமர்சித்தற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் முதல்வர் பினராயி விஜயன்.

இதற்கிடையே, 3.34 கோடி உள்ள ஒட்டுமொத்த கேரள மக்கள் தொகையில், சிறுபான்மை சமூகங்களான இஸ்லாமிய மக்கள் 88.73 லட்சம், கிறிஸ்தவ மக்கள் தொகை 61.41 லட்சம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.