இந்தியா

இடதுசாரி கொள்கை: பினராயிக்கு வளைந்தது, ஷைலஜா டீச்சருக்கு வளையாதது ஏன்?!

இடதுசாரி கொள்கை: பினராயிக்கு வளைந்தது, ஷைலஜா டீச்சருக்கு வளையாதது ஏன்?!

நிவேதா ஜெகராஜா

கேரளாவில் பதவியேற்கும் புதிய அமைச்சரவையில் ஆளும் எல்டிஎஃப் கூட்டணியின் முக்கியத் தலைவராக கருதப்படும் ஷைலஜா டீச்சருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. வாய்ப்பு மறுப்பு பின்னணியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இருக்கிறாரா என்பது தொடர்பாக விரிவாக பார்ப்போம்.

கொரோனா வைரஸ் பிறப்பிடமான சீனாவின் வூஹானிலிருந்து இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி வந்திறங்கிய இடம் கேரளம்தான். முதலில் ஒரு நோயாளி என்று ஆரம்பித்து பிறகு, கொரோனா தொற்று அதிகரித்து அதிக கொரோனா நோயாளிகளைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக கொரோனா முதல் அலையின்போது கேரளா மாறியது. ஆனால், மிக குறுகிய காலத்தில் முதல் அலையை கட்டுப்படுத்தியது. இப்படி வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதில் முதல்வர் பினராயி விஜயனின் போர்ப்படை தளபதிகளில் ஒருவராக இருந்தவர் கேரளா சுகாதாரத்துறை அமைச்சரான கே.கே.ஷைலஜா டீச்சர். இதன்காரணமாக சிறந்த 50 பெண்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

அப்படிப்பட்ட ஷைலஜா டீச்சருக்கு பினராயி விஜயன் தலைமையிலான புதிய கேரள அமைச்சரவையில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எல்.டி.எஃப் கூட்டணியின் முன்னணி கூட்டாளியான சி.பி.எம், பினராயி விஜயனைத் தவிர முந்தைய அரசாங்கத்திலிருந்த அனைத்து மூத்த தலைவர்களையும் அமைச்சர்களையும் விலக்கி புதிய முகங்களைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதனால் கட்சி கொறடாவாக ஷைலாஜா டீச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பினராயி விஜயனுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்கப்பட்டது. அவரின் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை. இதற்கிடையே, ஷைலஜா டீச்சருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியின் தீர்மானத்தின்படியே, முன்னாள் அமைச்சர்களுக்கு இடம் மறுக்கப்படுகிறது என கூறப்பட்டு வந்தாலும், ஷைலஜா டீச்சரை திட்டமிட்டு பினராயி புறக்கணிக்கிறாரா என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள் அம்மாநிலத்தவர்கள். அதற்கு சில காரணங்களையும் முன்வைக்கிறார்கள். அது மக்கள் மத்தியில் ஷைலஜா டீச்சருக்கு ஏற்பட்டிருக்கும் புகழ். கொரோனா பாதிப்பு மற்றும் நிபா வைரஸ் போன்றவற்றில் ஷைலாஜாவின் சிறந்த கையாளுதல் காரணமாக அவரின் புகழ் பெருமளவில் உயர்ந்தது.

இதன் காரணமாக நடந்து முடிந்த தேர்தலில் மட்டண்ணூர் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஷைலஜா டீச்சரை அத்தொகுதி மக்கள் 58,872 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெற வைத்தனர். ஆனால் அதுவே, தர்மடோம் தொகுதியில் பினராயி விஜயன் 48,051 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுபோன்ற காரணங்களால்தான் முன்னாள் அமைச்சர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

இப்படி பினராயி விஜயன் தனது முன்னாள் அமைச்சர்களுக்கு பிரபலமாக இருப்பதற்கும், தங்கள் வேலைகளில் சிறப்பாக செயல்பட்டதற்கும், தேர்தல் ரீதியாகவும் வெகுமதி அளிக்க விரும்பவில்லையா என்ற கேள்விக்கு வலுசேர்க்கிறது மற்றொரு சம்பவம். கேரளாவின் முன்னாள் நிதியமைச்சரும், சிபிஎம் தலைவருமான தாமஸ் ஐசக். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அமைச்சரவையில் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டாம் என்று சிபிஎம் முடிவு செய்திருந்ததால், பிரபலமான மற்றும் ஒரு வெளிப்படையான தலைவராக இருந்த ஐசக்கிற்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தாமஸ் ஐசக் தேசிய அளவில் பிரபலமான முகமாக வளர்ந்து வருவதால் அவர் ஓரங்கட்டப்பட்டதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர். இங்கேயும், பினராயி விஜயன் ஒரு விதிவிலக்கு. முன்னதாக 1996 மற்றும் 1998 க்கு இடையில் மின்சார மற்றும் கூட்டுறவு அமைச்சராக பணியாற்றிய பினராயி விஜயன், 2016-ல் தர்மடோமில் இருந்து கேரளாவின் 12-வது முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐசக்கிற்கு அனுமதி மறுக்கப்பட்ட அதேநேரம், அவரைப்போலவே இரண்டு முறை அமைச்சர், முதல்வர் பதவிகளை வகித்த பினராயிக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.

இரண்டு தசாப்தங்களாக சிபிஎம் விஷயங்களை உன்னிப்பாக கவனித்து வரும் கேரளாவின் மூத்த அரசியல் பத்திரிகையாளர் ஒருவர், ``பிரதமர் நரேந்திர மோடிக்கு முரணான ஒரு நபராக பினராயி விஜயன் தன்னை காட்டிக்கொண்டு வருகிறார். தன்னை மதச்சார்பற்ற மற்றும் திறமையானவர் என்று முன்வைக்க பினராயி விரும்புகிறார். ஆனால், அவரின் செயல்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் அமைச்சர்களை அவர் புறம்தள்ள விரும்புகிறார்" என்றுள்ளார்.

சிபிஎம் கட்சியில் இதுபோன்று மூத்த தலைவர்கள், பிரபலமான தலைவர்கள் ஓரம்கட்டப்படுவது இது ஒன்றும் முதல் முறையல்ல. இதற்கு முன்பும் நடந்திருந்திருக்கிறது. இதற்கு முன்பும் இதை நடத்தியவர் பினராயி விஜயன் தான். கேரள முன்னாள் முதலமைச்சரும், மூத்த சிபிஐ தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன். இப்போது 98 வயதாக இருக்கும் அச்சுதானந்தன், 2006 மற்றும் 2011 க்கு இடையில் கேரள முதல்வராக இருந்தபோது, அந்த நேரத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த விஜயன் ஒரு புயலைக் கிளப்பினார். அது அச்சுதானந்தன் தலைமையை கேள்வி எழுப்பியது தான். வயது மூப்பையும், நீண்ட நாட்களாக பதவியில் இருந்து வருவதையும் பினராயி கேள்வி எழுப்பி அச்சுதானந்தனின் தலைமையை அவர் தொடர்ந்து பலவீனப்படுத்தி வந்தார்.

கடைசியில் பினராயி விஜயனே வென்றார். 2016-ல் சிபிஎம் வென்ற பிறகு அச்சுதானந்தனுக்கு பதவி மறுக்கப்பட்டது. இறுதியாக பினராயி முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். முதலமைச்சரின் அலுவலகத்திற்குள் நுழைந்தபோது அச்சுதானந்தனையும் அவரது ஆதரவாளர்களையும் ஓரங்கட்டினார். இப்போதும் அதேபோல் ஒரு நிலைமை ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக பினராயி விஜயன் திட்டமிட்டு முன்கூட்டியே ஓரம்கட்டும் வேலையை துவங்கி இருக்கிறார் என சந்தேகிக்கிறார்கள் அம்மாநில அரசியல் பார்வையாளர்கள்.

அதற்கேற்ப தாமஸ் ஐசக் மற்றும் கே.கே. ஷைலாஜா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ ஓரங்கட்டப்பட்ட மற்ற தலைவர்களில், முன்னாள் கைத்தொழில் மற்றும் விளையாட்டு அமைச்சர் இ.பி.ஜெயராஜன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஜி.சுதாகரன், சட்ட அமைச்சர் ஏ.கே.பாலன் மற்றும் கல்வி அமைச்சர் சி.ரவீந்திரநாத் ஆகியோர் அடங்குவர்.

இருப்பினும், ஓரங்கட்டப்பட்ட அனைத்து அரசியல்வாதிகளைவிட, கே.கே. ஷைலஜாவுக்கு அமைச்சரவை இடம் மறுக்கப்படுவது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவு கேரளாவைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தேசிய கட்சியான சிபிஎம் மீது மோசமாக பிரதிபலிக்கிறது. கொரோனா போன்ற கடுமையான தொற்றுநோய்களின் போது ஷைலஜாவின் அரசியல் எதிர்காலத்தை காலி செய்து சுகாதார அமைச்சராக ஒரு முறை அவர் ஆட்சி செய்த சட்டமன்றத்தில் மீண்டும் எம்.எல்.ஏ.வாகக் குறைப்பது, சிபிஎம் கட்சியின் பெண் வாக்காளர் தளத்தை வருத்தப்படுத்தக்கூடும். மேலும் சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றுவதற்கான தனது கட்சியின் முடிவை ஆதரித்த பெண்களிடமிருந்து பினராயி விஜயன் பெற்ற நல்லெண்ணத்தை இழக்க வைக்கும்.

ஷைலாஜாவை கைவிடுவது என்பது சிபிஐஎம்-க்கு தேசிய அளவில் மோசமான விஷயம் என்று விஜயன் நினைக்கவில்லையா அல்லது இது ஒரு மோசமான அரசியல் நடவடிக்கை அல்ல அவர் நினைக்கிறாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவர் எடுக்கும் முடிவுகளுக்கு சிபிஎம் தலைமை எப்போதும் ஆதரவளித்து வருகிறது. அப்படியானால் பினராயி விஜயனும் அவரது அரசியல் முன்னுரிமைகளும் சிபிஎம் கட்சியை விட உயர்ந்தவையா?. இதற்கு பினராயி மற்றும் கட்சி தலைமையே விடை சொல்ல வேண்டும்.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக புலப்படுகிறது. அதாவது பினராயி விஜயன் தலைமையின் கீழ் அவரின் கட்சியின் மூத்த தலைவர்களின் தொடர்ச்சியான ஓரங்கட்டல், கட்சியில் பினராயி விஜயன் சொல்வது இப்போது வேறு எந்தத் தலைவரையும் விட வேதவாக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

- மலையரசு