இந்தியா

“கேரளாவை பிளவுபடுத்துகிறார் பினராயி விஜயன்” - ரமேஷ் சென்னிதாலா

“கேரளாவை பிளவுபடுத்துகிறார் பினராயி விஜயன்” - ரமேஷ் சென்னிதாலா

webteam

சபரிமலை விவகாரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் கேரளாவில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தி வருவதாக எதிர்கட்சித்தலைவரும் காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான ரமேஷ் சென்னிதாலா குற்றம் சாட்டியுள்ளார். 

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அன்மையில் தீர்ப்பு வழங்கியது. இதனால் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள், இந்து அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

ஆனால் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி உத்தரவிட்டார். 

போராட்டம் நடத்தும் கூட்டத்தினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்து வருகின்றனர். இதுவரை 50 வயதிற்கு கீழ் உள்ள பெண்கள் சபரிமலைக்கு செல்ல முடியாத நிலை நீடித்து வருகின்றது. 

இந்நிலையில், எதிர்கட்சித்தலைவரும் காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான ரமேஷ் சென்னிதாலா மனோரமா சேனலுக்கு சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது, சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த அரசு அவசரப்படத் தேவையில்லை எனத் தெரிவித்தார். 

மேலும், சபரிமலை விவகாரத்தை வைத்து முதலமைச்சர் பினராயி விஜயன் கேரளாவில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்துவதாகவும் உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தாத பல சம்பவங்களை நாங்கள் பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டருக்குள் டாஸ்மாக் இருக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை பினராயி விஜயன் உடனடியாக அமல்படுத்தாத போது சபரிமலை விவகாரத்தில் மட்டும் ஏன் அவசரப்பட வேண்டும் என சென்னிதாலா கேள்வி எழுப்பியுள்ளார். 

மதுபான பிரச்னையில் கேரளாவில் பிளவு ஏற்பட விரும்பவில்லை எனக் கூறி பினராயி விஜயன் அறிவிப்பை திரும்ப பெற்றதாகவும் ஆனால் இப்போது அவர் செய்யும் செயல் பிளவை ஏற்படுத்துகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

சபரிமலை விவகாரத்தில் பாஜகவில் இருந்து காங்கிரஸ் எவ்வாறு வேறுபடுகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த சென்னிதாலா, பா.ஜ.க., ஒரு அமைதியான மற்றும் சட்டபூர்வமான முறையில் செயல்படுவதற்கு பதிலாக மாநிலத்தை முரண்படுத்துவதற்கு முயல்வதாகவும், காங்கிரஸ் அவ்வாறு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.