இந்தியா

நிலவில் மனிதன் கால் வைத்து 50 ஆண்டு நிறைவு: பிஐபி ட்வீட்!

நிலவில் மனிதன் கால் வைத்து 50 ஆண்டு நிறைவு: பிஐபி ட்வீட்!

webteam

நிலவில் மனிதன் கால் வைத்து 50 ஆண்டுகள் ஆனதை அடுத்து, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகமான பிஐபி, அதை நினைவு கூர்ந்துள்ளது. 

1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி ‘அப்போலோ 11’ என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதில் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்டிரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் பயணித்தனர். 'அப்போலோ 11’ விண்ணில் ஏவப்பட்ட பின், 102 மணி நேரம் 45 நிமிடம் 39 விநாடி அளவில் பயணித்து நிலவை சென்றடைந்தது. இதைத் தொடர்ந்து 1969ஆம் ஆண்டு, ஜூலை 20ஆம் தேதி நிலவில் முதல் மனிதராக, நீல் ஆம்ஸ்ட்ராங், தனது காலைப் பதித்தார். இந்த நிகழ்வு நடந்து இன்றுடன் 50 ஆண்டுகள் முடிந்துள்ளது.

இதை நினைவு கூறும் விதமாக, பிஐபி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘FromPIBArchives’  என்ற ஹேஸ்டேக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், அப்போதைய இந்திய குடியரசுத்தலைவர் ஹிதயத்துல்லா, அமெரிக்க அதிபர் நிக்‌ஷனிற்கு எழுதிய கடிதத்தை பதிவு செய்துள்ளது. 

அந்தக் கடிதத்தில், “அமெரிக்கா நடத்திய இந்தச் சாதனைக்கு இந்தியா சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.  'நிலவில் மனிதன்’ என்ற இந்த சாதனைத் திட்டம் விண்வெளி ஆய்வுக்கு மேலும் பல புதிய கதவுகளைத் திறந்துள்ளது. நிலவுக்கு சென்றுள்ள மூன்று விண்வெளி வீரர்களும் பத்திரமாக பூமிக்கு திரும்ப இந்தியா சார்பில் பிரார்த்திக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.