இஸ்ரோ வெளியிட்ட புகைப்படங்கள் pt web
இந்தியா

இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம்: நிலச்சரிவு காட்டும் கோரமுகம்; 300ஐ தாண்டிய உயிரிழப்புகள்!

PT WEB

அதி கனமழையால் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவு காரணமாக முண்டக்கை, சூரல்மலை, ஆட்டமலா, நூல்புழா பகுதிகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. மண் குவியலில் ஏராளமான வீடுகள் மூழ்கிய நிலையில், 296 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 3 நாள்களாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் போதும் 200க்கும் மேற்பட்டோர் கிடைக்கவில்லை என்பதால், உறவினர்கள் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர். உயிரிழப்பு அதிகரிக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

வயநாடு

மீட்புப் பணியில் மாநில, தேசிய பேரிடர் குழுவினர், ராணுவத்தினர், தீயணைப்புத்துறையினர் என பல்துறையை சேர்ந்தவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து ஈடுபட்டு வருகின்றனர். பணிகளை விரைந்து முடிக்க இடிபாடுகளை அகற்ற வழிவகை செய்யும் வகையில் தற்காலிக இரும்பு பாலத்தையும் ராணுவத்தினர் விரைவாக கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் மீட்புப் பணிகள் துரிதமடையும் என்கின்றனர்.

இதனிடையே, இஸ்ரோ வெளியிட்ட செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் பார்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது. நிலச்சரிவுக்கு முன்பு இருந்த மலைப்பகுதி மற்றும் நிலச்சரிவுக்கு பிறகு உள்ள மலைப்பகுதியின் புகைப்படங்கள் நிலச்சரிவின் கோரமுகத்தை காட்டுகிறது. 86 ஆயிரம் சதுர மீட்டர் பரப்புக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், 8 கிலோ மீட்டர் வரை மணல் ஆற்றுடன் கலந்து சரிந்துள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

வயநாடு தொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம்

நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் இருந்த மக்கள் மீட்கப்பட்டு 45 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து வழங்கி வருகின்றன. அதேபோல், நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கேரளவுக்கு நிதியுதவியை நிவாரணமாக வழங்கி வருகின்றனர்.