விவேகானந்தர் நினைவிடத்தில் மோடி தியானம் ட்விட்டர்
இந்தியா

கன்னியாகுமரி | விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் பிரதமர் மோடி தியானம்... வீடியோ வெளியீடு!

ஜெனிட்டா ரோஸ்லின்

மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை ஓய்வடைந்த நிலையில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஜூன்1) ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் நேற்று (30.5.2024) மாலை முதலே தியானம் மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை 4.35 மணிக்கு கன்னியாகுமரியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தை வந்தடைந்தார் பிரதமர் மோடி.

பின்னர், நேற்று மாலை சுமார் 6.45 மணி அளவில் விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் பிரதமர் மோடி தியானத்தை தொடங்கினார். கிட்டதட்ட 45 மணி நேரம் தொடரவிருக்கும் பிரதமர் மோடியின் தியானம் குறித்த எந்த புகைப்படங்களும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் வெளியாகி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

காவி உடையணிந்து, நெற்றியில் பட்டை, குங்குமம் வைத்து, கையில் ருத்திராட்ச மாலையுடன் இன்று 2 ஆவது நாளாக விவேகானந்தரின் சிலைக்கு முன்பாக அமர்ந்து தியானம் மேற்கொண்டு வருகிறார் பிரதமர் மோடி.

மேலும், நாளை பிற்பகல் 3.30 மணி வரை தொடரும் இந்த தியானத்தில், மோடி திரவ உணவை மட்டுமே உண்பார் எனவும், தியானம் முடியும் வரை மௌன விரதம் இருப்பார் எனவும், அறையை விட்டு வெளியே வரமாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி கன்னியாகுமரி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரதமர் வந்திறங்கிய ஹெலிகாப்டர் தளம், பிரதமர் செல்லும் வழிகள், விவேகானந்தர் நினைவு மண்டபம், மற்றும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களை சிறப்பு பாதுகாப்புப்படை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

குமரி கடல் பகுதிகளில் இந்திய கடற்படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.