டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற இருவேறு பேரணியில் இருதரப்புக்கும் இடையே வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியில் 3-ஆவது நாளாக நேற்றும் வன்முறைகள் தொடர்ந்தன. வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து வன்முறைகளை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே டெல்லி கலவரத்தை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் ராணுவத்தை களம் இறக்க வேண்டுமென்றும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் டெல்லி வன்முறையில் சிக்கிய டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் புகைப்படக்கலைஞர் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து அந்நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் 'மாஜ்பூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு நான் சென்ற 15 நிமிடங்களில் இருதரப்பினர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். நெருப்பும், புகையுமாக அப்பகுதி இருந்தது. நான் சில புகைப்படங்களை எடுப்பதற்காக ஓடினேன். அப்போது சிலர் என்னை வழி மறித்தார்கள். நான் புகைப்படம் எடுக்க செல்கிறேன் என தெரிவித்தேன். அவர்கள் என்னை அங்கு போகவேண்டாம் என்று கூறினார்கள். நீயும் இந்து. பிறகு ஏன் அங்கு செல்கிறாய்? என்று கேட்டார்கள்.
அப்போது சற்று விலகி நின்றேன். பிறகு மீண்டும் புகைப்படங்கள் எடுக்க தொடங்கினேன். அப்போது கட்டை, கம்பிகளுடன் சிலர் என்னை சூழ்ந்து கொண்டார்கள். அப்போது என்னுடன் பணிபுரிபவர் வந்தார். உடனடியாக என்னை சுற்றி இருந்தவர்கள் நழுவிச் சென்றார்கள். ஆனால் பின் அவர்கள் என்னை பின்தொடர்ந்தே வந்தார்கள். ஒரு இளைஞர் என்னிடம் வந்து நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள். சொல்லுங்கள்.. நீங்கள் இந்துவா? முஸ்லிமா? எனக் கேட்டார். என்னுடைய மதத்தை தெரிந்து கொள்வதற்காக என்னுடைய ஆடையை கழற்றச் சொன்னார்.
நான் வெறும் புகைப்படக்கலைஞர்தான் என நான் சொன்னேன். எனக்கு சில மிரட்டல்களை கொடுத்தவாறே அவர்கள் என்னை நகர்ந்து போக அனுமதித்தனர். உடனடியாக அங்கு வந்த ஆட்டோவை பிடித்து நான் கிளம்பினேன். அப்போதும் 4 பேர் ஆட்டோவை வழிமறித்தார்கள். சட்டையை பிடித்து வெளியே இழுத்தார்கள். நான் ஒரு பத்திரிகையாளர், அவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்று சொன்னேன். அவர்கள் எங்களை போகவிட்டார்கள். என் வாழ்க்கையில் உன் மதம் என்னவென்று இவ்வளவு கொடூரமாக யாருமே என்னிடம் கேட்டதில்லை” என்று தெரிவித்துள்ளார்.