இந்தியா

‘வெள்ளை தாடியுடன்’ ஒமர் அப்துல்லா - வைரலாகும் புகைப்படம்

‘வெள்ளை தாடியுடன்’ ஒமர் அப்துல்லா - வைரலாகும் புகைப்படம்

webteam

ஆறு மாதங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஜம்மூ-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர், காஷ்மீரில் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லா மற்றும் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சியின் தலைவர் சஜத் லோன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர். இதில் ஒமர் அப்துல்லா தனது அதிகாரப்பூர்வ வீட்டிற்கு அருகே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

ஒமர் அப்துல்லாவின் வீட்டுக்காவல் ஆறு மாதங்களாக தொடரும் நிலையில், தற்போது அவரின் புகைப்படம் ஒன்று ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்தப் படத்தில் ஒமர் அப்துல்லா அடையாளம் காண முடியாத வகையில் நீண்ட வெள்ளை தாடியுடன் காட்சியளிக்கிறார். இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பலர், அவரை வீட்டுக்காவலில் வைத்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிலர் அவருக்கு ஆதரவளிக்கும் வகையில் ‘மீண்டு வாருங்கள்’ என கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “இந்தப் புகைப்படத்தில் ஒமரை என்னால் அடையாளம் காண முடியவில்லை. வருத்தமாக இருக்கிறது. நமது ஜனநாயக நாட்டில் துரதிருஷ்டவசமாக இது நடந்திருக்குமானால், எப்போது தான் இதற்கு முடிவு வரும் ?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.