ஃபைசர் நிறுவனம் இந்தியாவில் தனது கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டு்க்கு அனுமதிக்க கோரி, மத்திய அரசிடம் அளித்திருந்த விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.
இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் கேட்ட தடுப்பூசி தொடர்பான கூடுதல் விவரங்களை திரட்ட வேண்டியிருப்பதாகவும், எனவே ஏற்கனவே அளித்திருந்த விண்ணப்பத்தை திரும்பப் பெறுவதாகவும் ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கு அனுமதி கோரி ஃபைசருக்கு பிறகு விண்ணப்பித்த சீரம் இன்ஸ்டிட்யூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் ஃபைசர் நிறுவனம் தனது தடுப்பு மருந்தை இந்தியாவில் பரிசோதிக்கவில்லை என்பதால் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் தராமல் இருந்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசின் அனுமதி பெற்றுள்ள கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு மருந்துகளும் இந்தியாவில் சோதிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் ஃபைசரின் மருந்து அவசர கால பயன்பாட்டில் இருந்து வருகிறது.