Video image x page
இந்தியா

”எனக்கு பெண் பார்க்கவும்” - பெட்ரோல் போடவந்த எம்.எல்.ஏவிடம் கோரிக்கை வைத்த பம்ப் ஊழியர்! #ViralVideo

Prakash J

திருமணம் என்பது இருபாலருக்கும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் நடைபெறும்போது, அவர்கள் ஒரு முழுமையான குடும்ப அமைப்பின் வாழ்வியலை எட்டுகின்றனர். ஆனால், அதில் காலம் தாழ்த்தப்படும்போது அவர்கள் வேறுமாதிரியான பிரச்னைகளை சந்திக்கின்றனர். அதாவது, பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் பொருத்தமான வரன் கிடைப்பதில் ஏமாற்றமடைகின்றனர். இன்னும் சொல்லப்போனால், வயது அதிகரிக்கும்பட்சத்தில் அவர்களுக்கு வரன்களே அமைவதில்லை. தவிர, வயது அதிகரிப்பால் குழந்தை பிறப்பு உள்ளிட்ட பிரச்னைகளையும் சந்திக்கின்றனர். இந்த நிலையில்தான் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான நபர், அவர் தொகுதி எம்.எல்.ஏவிடம் தனக்கு பெண் பார்க்கச் சொல்லி கோரிக்கை வைத்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் சர்க்காரி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர், பிரிஜ்பூஷண் ராஜ்புட். இவர் தனது காரில் பயணம் மேற்கொண்டபோது, மஹோபா என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வாகனத்தை நிறுத்தி எரிபொருள் நிரப்பினார். அப்போது பெட்டோல் நிரப்பும் ஊழியரான சர்காரியில் வசிக்கும் அகிலேந்திர கரே என்பவர், பிரிஜ்பூஷணை நெருங்கி, தனக்கு பெண் பார்க்க உதவும்படி கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக இருவரிடையே நடைபெற்ற உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: பாபாசித்திக் படுகொலை| சல்மான்கானுக்கு மிரட்டல்.. மிகப்பெரிய நெட்வொர்க்.. யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்?

வீடியோவில், அந்த ஊழியர் எம்.எல்.ஏவிடம், "தனக்கு பெண் பார்க்க உதவுங்கள்" எனக் கேட்கிறார்.

அதற்கு எம்.எல்.ஏ., "உங்களுக்கு என்ன வயது ஆகிறது" எனக் கேட்க, அந்த ஊழியர், "43 வயது ஆகிறது" எனக் கூறுகிறார்.

இதையடுத்து எம்.எல்.ஏ., “உங்களுக்கு பெண் தேடுவதற்காக என்னை தேர்ந்தெடுத்தது ஏன்?" என கேட்கிறார்.

அதற்கு அந்த ஊழியர், "நான் உங்களுக்கு வாக்களித்துள்ளேன்" எனத் தெரிவிக்கிறார்.

அதற்கு எம்.எல்.ஏ. "வேறு யாரிடமாவது பெண் பார்க்கச் சொன்னீர்களா? நாங்கள் உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன். பெண் தேட முயற்சிக்கிறேன். ஏனென்றால் நீங்கள் எனக்கு வாக்களித்துள்ளீர்கள்" எனக் கூறுகிறார்.

பின்னர், “உங்களுடைய வருமானம் எவ்வளவு? ஒருவேளை, பெண் வீட்டார் கேட்டால் கூற வேண்டும்” எனக் கேட்க, அந்த ஊழியர், "6 ஆயிரம் ரூபாய்” என்பதுடன், “13 பிகாஸ் நிலம் உள்ளது" என்கிறார்.

அதற்கு எம்.எல்.ஏ., ”நிலம் கோடிக்கணக்கில் மதிப்புமிக்கது. உங்களுக்கு உதவி செய்வேன்" எனக் கூறுகிறார். எம்.எல்.ஏவிடம் கோரிக்கை வைத்த பெட்ரோல் பம்பின் ஊழியர் குறித்த வீடியோதான் இணையத்தை கலக்கி வருகிறது.

இதையும் படிக்க: செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு | எலான் மஸ்க் - முகேஷ் அம்பானி மோதல்.. மத்திய அரசு அதிரடி முடிவு!