பெட்ரோல், டீசல் விற்பனையில் பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும் இதற்கு தீர்வு காண உதவுமாறும் பெட்ரோல் சில்லறை விற்பனையாளர் கூட்டமைப்பினர் மத்திய அரசை கடிதம் எழுதியுள்ளனர். இதனால் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயரப்போகிறதா என்ற அச்சம் பயனர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 120 டாலராக உயர்ந்துள்ள போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சுமார் ஒரு மாதமாக உயர்த்தப்படவில்லை. இதனால் தங்களுக்கு பெரும் தொகை இழப்பு ஏற்படுவதாக தனியார் பெட்ரோல் விற்பனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஒரு லிட்டர் பெட்ரோலை 20 முதல் 25 ரூபாய் அளவிற்கும் டீசலை 14 முதல் 18 ரூபாய் அளவிற்கும் குறைவாக விற்க வேண்டியுள்ளதாக தனியார் பங்குகள் தெரிவித்துள்ளன. இது குறித்து கவலை தெரிவித்து தனியார் பெட்ரோல் பங்குகள் மற்றும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை பெட்ரோலிய விற்பனையாளர்களை உறுப்பினர்களாக கொண்ட இந்திய பெட்ரோலியத் துறை கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
இதில் பெட்ரோலிய பொருள் விற்பனையில் ஏற்படும் இழப்பை சரிக்கட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் இத்துறையில் மேற்கொண்டு புதிய முதலீடுகளுக்கு வாய்ப்பிருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயரப்போகிறதா என்ற அச்சம் பயனர்கள் மத்தியில் எழுந்துள்ளது.