மோடி, டெல்லி உயர்நீதிமன்றம் ட்விட்டர்
இந்தியா

தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிட தடை கோரிய மனு.. தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்!

தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிட தடை கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Prakash J

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, இரண்டு கட்டங்களை நிறைவு செய்திருக்கிறது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதைத்தொடர்ந்து, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக நாடு முழுவதும் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக, பல தொகுதிகளிலும் காங்கிரஸை பாஜக குற்றஞ்சாட்டுவதும், பாஜகவை காங்கிரஸ் குற்றஞ்சாட்டுவதும் வாடிக்கையாக வருகிறது. சில நேரங்களில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறையையும் மீறி வேட்பாளர்களும், தலைவர்களும் மதரீதியாகப் பேசி வருகின்றனர். அது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்டர்களிடம் விளக்கமும் கேட்டுள்ளது.

பிரதமர் மோடி

இந்த நிலையில், ”மதத்தின் பெயரால் வாக்கு கேட்டு தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும்” என வழக்கறிஞர் ஜோன்டேல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிக்க: வேட்பு மனு வாபஸ்.. பாஜகவில் ஐக்கியம்.. ஷாக் கொடுத்த காங். வேட்பாளர்.. இந்தூரிலும் பாஜக வெற்றி?

அம்மனுவில், ”தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதாகவும், உத்தரப் பிரதேசத்தில் இந்து தெய்வங்கள் மற்றும் இந்து வழிபாட்டுத் தலங்கள், சீக்கிய தெய்வங்கள் மற்றும் சீக்கிய வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு பாஜகவுக்கு வாக்களிக்குமாறு பிரதமர் மோடி வாக்கு சேகரித்ததன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், மதத்தின் பெயரால் வாக்கு சேகரித்தது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிரானது என்பதால் பிரதமர் நரேந்திர மோடியை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

டெல்லி உயர்நீதிமன்றம்

இந்த வழக்கு நீதிபதி சச்சின் தத்தா முன்பு இன்று (ஏப்.29) விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இதுபோன்ற கோரிக்கை மனுக்களை தேர்தல் ஆணையம் நாள்தோறும் விசாரித்து வருகிறது. மனுதாரரின் புகார் மனு, தேர்தல் ஆணையத்தில் பரிசீலனையில் உள்ளது. சட்டப்படி உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்" என தெரிவித்தார். இதையடுத்து, ”குறிப்பிட்ட முறையில் செயல்பட இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்பதால், இந்த மனு முற்றிலும் தவறானது” என தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிட தடை கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையும் படிக்க: ’lover’ பட பாணி|தினமும் 100 முறை போன் செய்த காதலி.. டார்ச்சர் தாங்க முடியாமல் போலீஸிடம் ஓடிய காதலன்!