டெல்லி pt web
இந்தியா

3 மணி நேரம்... வறட்சி, தண்ணீர் தேடலில் இருந்த டெல்லியை புரட்டிப் போட்ட கனமழை

தலைநகர் டெல்லியில் 1936-ஆம் ஆண்டுக்குப்பிறகு பெய்த மிக கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளும் மழைநீரில் தத்தளித்தன. கனமழை வெள்ளத்தால் பல பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்தது. சர்வதேச விமானநிலையத்தின் மேற்கூரை சரிந்து நேரிட்ட விபத்து அதிர வைத்துள்ளது.

PT WEB

ஆட்டம் கண்ட டெல்லி

சாலையே தெரியாத அளவுக்கு மழை வெள்ளம்.. சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீர்.. தண்ணீரில் செல்லமுடியாமல் ஆங்காங்கே சிக்கிக்கொண்ட வாகனங்கள்.. ஒரே இரவில் டெல்லியே ஆட்டம் கண்டுவிட்டது.

டெல்லியில் 1936-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28-ஆம்தேதி இதேபோன்ற கனமழை பெய்தது. அந்நாளில் 24 மணிநேரத்தில் 23.55 சென்டிமீட்டர் மழை பெய்து ஓய்ந்தது. தற்போது அதே ஜூன் 28 ஆம்தேதி 22.8 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக அதிகாலை 2 மணி முதல் 5 மணிக்குள்ளாக பெருமழை பெய்துள்ளது.

டெல்லி NCR பகுதியில் கனமழை காரணமாக பல பகுதிகளையும் தண்ணீர் சூழ்ந்தது. டெல்லியின் பிரதான பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. வழக்கமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள டெல்லியில் இந்த மழை கூடுதல் நெரிசலை ஏற்படுத்தி வாகன ஓட்டிகளை பரிதவிக்க வைத்துவிட்டது. சாலையோரம் மண்பாண்டக்கடை வைத்திருந்த சிறுவியாபாரிகளின் தயாரிப்புகள் அத்தனையும் மழையில் வீணாகின.

எங்கு காணினும் தண்ணீர்

தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. கனமழை காரணமாக வசந்த் விஹார் பகுதியில், கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த இடத்தில் இரண்டு மரங்கள் முறிந்து விழுந்தன. தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் சுவர் இடிந்த விபத்தில் 3 பேர் சிக்கிக்கொண்டனர்.

அதிகனமழை காரணமாக டெல்லி என்சிஆர் மட்டுமின்றி, தெற்கு டெல்லியின் கோவிந்த்புரி, நொய்டா செக்டார் 95 உள்ளிட்ட பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. டெல்லிக்கு தண்ணீர் வேண்டும் என்று கூறி உண்ணாவிரதம் இருந்த டெல்லி அமைச்சர் அதிஷியின் வீட்டையும் வெள்ளம் சூழ்ந்தது.

தலைகீழாக புரட்டிப் போட்ட மழை

பிரகதி மைதான் சுரங்கப்பகுதியில் இடுப்பளவுக்கு தண்ணீர் சூழ்ந்ததால் அந்தப் பகுதியில் வாகனப்போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. முன்னதாக டெல்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமானநிலையத்தின் முதல் முனையத்தில் மேற்கூரை சரிந்து விழுந்தது. இதன்காரணமாக முதல் முனையத்தில் எந்த சேவையும் நடைபெறவில்லை. மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் காரில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். உயிரிழந்தவர் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு விமானநிலையத்தில் நேரிட்ட இந்த விபத்து குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

மழைநீர் தேங்கிய பகுதிகளில் ராட்சத மோட்டார்களைக் கொண்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதேபோல மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. முன்தினம் வரை வறட்சி, தண்ணீருக்கான தேடல் என தவித்துக்கொண்டிருந்த டெல்லியை, 3 மணிநேர மழை அப்படியே தலைகீழாக புரட்டிப்போட்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.