கொரோனா பிரச்சனையால் உணவின்றி தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் தினமும் உணவு வழங்கி அவர்களின் பசியை போக்கி வருகிறது.
ஈஷா யோகா மையம் அமைந்துள்ள தொண்டாமுத்தூர் பகுதி முழுவதுமே பல நிவராணப் பணிகளை ஈஷா தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர். முட்டத்துவயல், முள்ளாங்காடு, மடக்காடு, ஜாகிர்நாயக்கன்பதி, சீங்கபதி போன்ற மலைவாழ் கிராமங்கள், செம்மேடு, ஆலாந்துறை, பூலுவப்பட்டி உட்பட ஏராளமான கிராமங்களுக்கு ஈஷா உதவி வருகிறது.
ஒவ்வொரு பஞ்சாயத்திலும் அங்குள்ள பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அலுவலர் மூலம் அவர்கள் பகுதிகளில் உணவின்றி தவிக்கும் மக்களின் விவரங்களை சேகரித்து, அவர்களின் வீடுகளுக்கே ஈஷா தன்னார்வலர்கள் நேரடியாக சென்று உணவு வழங்கி வருகின்றனர். இப்பணியில் அந்தந்த ஊர்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களும் ஈஷாவுடன் கரம்கோர்த்து களப் பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக, தினக் கூலி தொழிலாளர்கள், விவசாய கூலி தொழிலாளர்கள், பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பிழைப்புக்காக இங்கு வந்தவர்கள், வீடு வாசல் இன்றி சாலையோரம் மற்றும் கோயில் வாசல்களில் தஞ்சம் அடைந்த ஆதரவற்றோர்களுக்கு அதிக முக்கியம் அளித்து உதவி வருகின்றனர். உணவு மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக நிலவேம்பு கசாயமும் வழங்கப்படுகிறது.
இதுதவிர, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர், உள்ளாட்சி பணியாளர்கள் ஆகியோருக்கு முகக் கவசம் மற்றும் சானிடைசர் வழங்கப்படுகிறது. மேலும், பூலுவப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்துதல் வார்டு அமைக்க தேவையான அனைத்து பொருள் உதவிகளையும் ஈஷா செய்து கொடுத்துள்ளது.