டெல்லியின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள மங்கோல்புரில் கடந்த 25 ஆம் தேதி (நேற்று முன்தினம்) காலை 6 மணி அளவில் ‘ஒய் பிளாக்’ என்ற பகுதியில் அமைந்துள்ள மசூதியை திடீரென டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் இடிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும், துணை ராணுவப் படையினரும் அங்கே குவிக்கப்பட்டனர்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் அங்கே திரண்டு, மசூதி இடிப்பு நடவடிக்கையை மேற்கொண்ட டெல்லி மாநகராட்சியிடம் காரணத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் உடனடியாக பதில் எதுவும் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் அம்மக்கள் மசூதியை சுற்றிலும் மனித சங்கிலியை உருவாக்கி திரண்டு, மசூதியை இடிக்கவிடாமல் தடுத்து, பெரும் போராட்டத்தை மேற்கொண்டனர். குறிப்பாக அப்பகுதி பெண்கள் மசூதியை இடிக்கவிடாமல் தடுக்க பெரும் போராட்டத்தினை முன்னெடுத்தனர். இதனையடுத்து, மசூதியை இடிக்க முற்பட்ட வாகனத்தின் மீது கல் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அவை எதுவும் உண்மை இல்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்த காவல்துறை துணை ஆணையர் ஜிம்மி, ”அப்பகுதி மக்கள் மசூதி இடிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. மசூதியின் ஒரு சில பகுதிகள் இடிக்கப்பட்டுள்ளன. சில பகுதிகள் மிகவும் வலிமையாக இருப்பதால், அதிக கனகர இயந்திரங்கள் தேவைப்பட்டது. ஆகவே தற்காலிகமாக இடிப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த பிரச்னை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த மசூதி ஆக்கிரமிப்பு நிலத்தில் இருப்பதாக புகாரளித்தது இந்துத்துவா தலைவர் ப்ரீத் சிஹோரி என சொல்லப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் இவரளித்த புகாரின்பேரில் டெல்லியில் பாவனா என்ற இடத்திலிருந்த மசூதியொன்று வனப்பகுதியில் இருப்பதாக குறிப்பிடப்பட்டு, ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. தொடர்ச்சியான இச்சம்பவங்கள், தலைநகர் டெல்லியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.