இந்தியா

கொரோனாவால் நேர்ந்த துயரங்கள் நீங்குமா? சோதிடர்களை நாடும் சாமான்ய மக்கள்..!

கொரோனாவால் நேர்ந்த துயரங்கள் நீங்குமா? சோதிடர்களை நாடும் சாமான்ய மக்கள்..!

webteam

டெல்லியைச் சேர்ந்த சோதிடர் சஞ்சய் சர்மா ஊரடங்கு நாட்களிலும் பரபரப்பாக இருக்கிறார். அவரை நாடி மக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். ஊரடங்கு நாட்களுக்குப் பிறகு எதிர்காலம் பிரகாசமாக மாறுமா என்பதுதான் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி. இதுபற்றி ராய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

சோதிடராகவும், குணப்படுத்துபவராகவும் விளங்குகிற சர்மா, கொரோனா பரவிவரும் காலத்தில் தன்னிடம் கவலைகளுடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு பிரார்த்தனை நடத்தி சில மூலிகைகளை வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். " தற்போது மக்கள் எதிர்காலத்தை நினைத்து மிகவும் பயந்துபோய் உள்ளனர்" என்கிறார் அவர்.

காற்றில் பறக்கும் தலைமுடி, நெற்றி நிறைய குங்குமம், கையில் சங்கிலிகள், பத்திகளில் இருந்து பரவும் நறுமணம் என பக்திமயமாக காட்சியளிக்கும் சர்மாவின் மேஜையில் ஆப்பிள் லேப்டாப் இருக்கிறது. "அவர்கள் பிழைத்திருப்பார்களா, அவர்களுக்கு வேலை இருக்குமா இருக்காதா, தொழில் செய்யமுடியுமா முடியாதா... இதுதான் கேள்விகளாக இருக்கிறது" என்று கூறுகிறார் சோதிடர் சர்மா.

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதார மற்றும் மனரீதியான இழப்புகளுக்கான தீர்வுகளைத் தேடி சோதிடர்களிடம் வருகிறார்கள். "என் மனம் கலக்கம் அடையும்போதெல்லாம் இங்கு வந்துவிடுவேன்" என்கிறார் சோதிடரைப் பார்க்க வந்த 52 வயதான அஞ்சலிதேவி. தன் மகன் செய்துவரும் தொழில் வளருமா என்றும் மகளுடைய திருமணம் பற்றியும் கேட்க வந்துள்ளார்.

பாலிவுட் நடிகர்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்களின் ஆன்மிக ஆலோசகர் மற்றும் பிரபல சோதிடரான அஜய் பாம்பி, கொரோனாவுக்குப் பிறகு அவரைத் தேடிவரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் உயர்ந்திருப்பதாகச் சொல்கிறார். "ஒரு சின்ன நம்பிக்கைக் கீற்றை அவர்களிடம் கண்டுவிட்டால் போதும், அவர்களுக்கான மிகப்பெரும் படத்தையே உருவாக்கிவிடுவேன்" என்கிறார் அஜய் பாம்பி.