இந்தியா

உ.பி.யில் மூதாட்டியை கடித்துக் கொன்ற பிட்புல் நாயை தத்தெடுக்க போட்டா போட்டி

உ.பி.யில் மூதாட்டியை கடித்துக் கொன்ற பிட்புல் நாயை தத்தெடுக்க போட்டா போட்டி

JustinDurai

உத்தரப் பிரதேசத்தில் 82 வயது மூதாட்டியை கடித்துக் கொன்ற பிட்புல்  நாயை தத்தெடுக்க ஏராளாமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் கைசர்பாக் பகுதியைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி சுசீலா திரிபாதி. இவரது மகன் அமித். அப்பகுதியில் ஜிம் பயிற்சியாளராக உள்ள இவர், தனது வீட்டில் பிட்புல் வகை நாயை மூன்று ஆண்டுகளாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் காலை 6 மணி அளவில் பிட்புல் நாய், சுசீலா திரிபாதியை கடித்துக் குதறி உள்ளது.

பின்னர், கொஞ்ச நேரம் கழித்து ரத்த வெள்ளத்தில் தனது தாயார் இருப்பதைக் கண்டு மகன் அமித் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக பல்ராம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அதிக ரத்தம் வெளியேறியதால்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னரே அவர் உயிரிழந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், சுசீலாவின் உடலில் கழுத்து முதல் வயிறு வரை மொத்தம் 12 இடங்களில் கடுமையான காயங்கள் காணப்பட்டதாகக் கூறப்பட்டு உள்ளது.

இதனைத்தொடர்ந்து மூதாட்டியை கடித்துக் குதறிய பிட்புல் நாயை லக்னோ மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர். அதனை தனிக்கூண்டில் அடைத்துவைத்து அதன் நடவடிக்கைகள், குணங்களை ஊழியர்கள் கண்காணித்து வந்தனர். இதனிடையே பிட்புல் நாயை அதன் உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்குமாறு மேனகா காந்தி மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தினார்.

இச்சூழலில் லக்னோ மாநகராட்சி வசமிருக்கும் பிட்புல் நாயை தத்தெடுக்க ஏராளமானோர் முன்வந்துள்ளனர். பெங்களூர், டெல்லி, லக்னோ மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நாய் வளர்ப்பவர்கள் உள்ளிட்டோர் லக்னோ மாநகராட்சியை அணுகி பிட்புல் நாயை  தத்தெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். பிட்புல் நாயை  தத்தெடுப்பது குறித்து விதிகளின் படி முடிவெடுக்கப்படும் என லக்னோ மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பிட்புல் நாய்கள் அடிப்படையில் மூர்க்க குணம் கொண்டவை. இவ்வகை நாய்களை ஒருகாலத்தில் வேட்டையாடுவதற்குப்  பயன்படுத்தியிருக்கிறார்கள். சண்டைகளுக்கும், வேட்டையாடுவதற்கும் பயன்படுத்தப்பட்டதால் இவ்வகை நாய்களை பெரும்பாலும் வீடுகளில் வளர்ப்பதில்லை. பிட்புல் நாயை இங்கிலாந்தில் வீட்டு பிராணியாக வளர்க்க தடை உள்ளது. இது மட்டுமல்லாது ஐந்து சர்வதேச விமான நிறுவனங்கள் பிட்புல் நாய்களை விமானத்தில் கொண்டு செல்லத் தடை விதித்திருக்கின்றன.

இதையும் படிக்க: பிட்புல் நாய்கள் ஏன் ஆபத்தானவை? நிபுணர்களின் பகீர் எச்சரிக்கை