இந்தியா

இந்தியாவின் மறதி நகரம் எது?

இந்தியாவின் மறதி நகரம் எது?

webteam

இந்திய அளவில் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலேயே அதிக வாடிக்கையாளர்கள், தங்கள் பொருட்களை காரில் மறந்துவைத்து விட்டு சென்று விடுவதாக, உபெர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேசிய அளவிலான உபெர் இண்டெக்ஸ் தகவல்கள் இன்று வெளியிடப்பட்டது. பெங்களுரு வாடிக்கையாளர்கள்தான் அதிக அளவிலான பொருட்களை காரிலேயே தவறவிட்டுச் செல்வதாகவும், அதற்கடுத்த இடங்களில் டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக வாடிக்கையாளர்கள் மறந்துவிட்டுச் செல்லும் பொருட்கள் பட்டியலில் செல்போன்கள் மற்றும் மோதிரங்கள் ஆகியவை முதலிரண்டு இடங்களில் இருப்பதாக, உபெர் நிறுவனம் தெரிவித்துள்ளது. சில நேரங்களில் வாடிக்கையாளர்கள், தங்கள் செல்ல வளர்ப்புப் பிராணிகளையே வாடகைக் கார்களில் மறந்து விட்டுச் செல்வதுண்டு என்றும், வாடிக்கையாளர் ஒருவர், ரூ.15 லட்சத்துக்கான காசோலையை மறந்துவிட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டில் டிசம்பர் 31, டிசம்பர் 11, டிசம்பர் 27 மற்றும் நவம்பர் 27 ஆகிய தேதிகளில் வாடிக்கையாளர்கள் அதிகப்படியான பொருட்களை மறந்துவிட்டு சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பொதுவாக அதிகமான பொருட்களை வாடிக்கையாளர்கள் காரிலேயே விட்டுச் செல்வதுண்டு என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.