இந்தியா

வீடியோ: ”க்ளினிக்கை திறக்க இவ்வளவு நேரமா?” : கதவை உடைத்து டாக்டரை கடுமையாக தாக்கிய மக்கள்!

JananiGovindhan

குறித்த நேரத்தில் க்ளினிக்கை திறக்காததால் வீடு புகுந்து மருத்துவரையும் அவரது மகனையும் நோயாளிகளும் அவர்களுடன் வந்தவர்கள் தாக்கிய சம்பவம் மகாராஷ்டிராவில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி அரங்கேறியிருக்கிறது.

இந்த சம்பவம் அனைத்தும் மருத்துவரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருக்கிறது. தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள்தான் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு காண்போரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

மகாராஷ்டிராவின் பாரமதியில் உள்ள சங்கவி என்ற பகுதியில் தனது வீட்டிற்கு அருகிலேயே ஆயுர்வேத க்ளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருபவர் யுவ்ராஜ் கெயிக்வாட்.

சம்பவம் நடந்த அன்று, மருத்துவர் யுவ்ராஜ் தனது குடும்பத்தினருடம் சேர்ந்து வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது வெளியே இருந்து பலரும் கதவை வேகமாக தட்டும் சத்தம் கேட்டதும் வெளியே வந்து பார்த்திருக்கிறார்.

க்ளினிக்கை திறப்பதற்கு தாமதமானதால் கொதித்துப்போன நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் டாக்டரின் வீட்டு கண்ணாடி ஜன்னலை முதலில் உடைத்திருக்கிறார்கள். பின்னர் கதவை உடைத்து உள்ளே வர எத்தனித்த போது யுவ்ராஜும் அவரது மகனும் கதவை திறக்க வந்த போது அவர்கள் இருவரையும் சூழ்ந்து அங்கிருந்த மக்கள் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.

இதனையடுத்து கெயிக்வாடும் அவரது மகனும் சிசிடிவி ஆதாரத்தோடு கொடுத்த புகாரின் அடிப்படையில் மாலேகான் காவல்துறையினர் ஆனந்த் என்கிற அனில் ஜக்தாப், விஸ்வஜீத் ஜக்தாப், அசோக் ஜக்தாப் மற்றும் பூஷன் ஜக்தாப் ஆகிய நால்வர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.