இந்தியா

நிலுவையில் உள்ள வழக்குகள்: மாவட்ட நீதிமன்றங்களில் 4 கோடி! உயர்நீதிமன்றங்களில் 60 லட்சம்!

நிலுவையில் உள்ள வழக்குகள்: மாவட்ட நீதிமன்றங்களில் 4 கோடி! உயர்நீதிமன்றங்களில் 60 லட்சம்!

ச. முத்துகிருஷ்ணன்

ஜூலை 15 வரை இந்தியா முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 4 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களில் சுமார் 59.5 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் 42 ஆயிரம் வழக்குகள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 1-ஆம் தேதி வரை 72 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூலை 15 நிலவரப்படி மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 5,300க்கும் மேற்பட்ட நீதித்துறை அதிகாரி பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, மகக்ளுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக கடந்த ஆண்டு சுமார் 39.96 கோடியை அரசு செலவிட்டுள்ளதாகவும் இ-கோர்ட்டுகளுக்கு 98.3 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் இல்லை என தெரிவித்துள்ள மத்திய அரசு, அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் பொதுமக்களின் கருத்துகளுக்கான சட்ட வரைவுகளை வெளியிடும் கொள்கை அரசிடம் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பல்வேறு மாநில அரசுகள் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால் "அகில இந்திய நீதித்துறை சேவைகள்" கொண்டு வர எந்த முன்மொழிவும் தங்களிடம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.