இந்தியா

பெலுகான் படுகொலை வழக்கு: மீண்டும் விசாரிக்க ராஜஸ்தான் அரசு உத்தரவு

பெலுகான் படுகொலை வழக்கு: மீண்டும் விசாரிக்க ராஜஸ்தான் அரசு உத்தரவு

rajakannan

குற்றம்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றம் விடுவித்துள்ள நிலையில், பெலுகான் படுகொலை வழக்கை மீண்டும் விசாரிக்க ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெலுகான் என்ற பால் வியாபாரி கடந்த 2017 ஆம் ஆண்டு பசுக்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ஜெய்ப்பூரில் இருந்து தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அல்வாரில் அவரது வாகனத்தை ஒரு கும்பல் வழிமறித்தது. பசு பாதுகாவலர்கள் எனத் தங்களை கூறிகொண்ட அந்தக் கும்பல் பெலுகானை கடுமையாக தாக்கியது. படுகாயமடைந்த பெலுகான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார். பெலுகானை தாக்கியவர்கள் என செல்போனில் பதிவான வீடியோ மூலம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதுதொடர்பான வழக்கு ராஜஸ்தானில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ராஜஸ்தான் போலீசார் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் பெலுகான் மீது பசுக்களை கடத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவத்தன்று பெலுகான் உடன் இருந்த அவரது மகன்கள் இர்ஷாத் மற்றும் ஆரிஃப் ஆகிய இருவர் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருந்தது. 

பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் இவ்வழக்கில் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. அதன்படி, பெலுகான் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். வீடியோவில் இருப்பவர்களின் உருவம் தெளிவாக இல்லை என்பதால், சந்தேகத்தின் பலனை கைது செய்யப்பட்டவர்களுக்கு சாதகமாக்கி, அவர்கள் 6 பேர் மீது குற்றம் சுமத்த முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பெலுகான் மகன், தன்னுடைய தந்தையை கொன்றது யார் தான் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்நிலையில், பெலுகான் படுகொலை சம்பவம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.