இந்தியா

'பெகாசஸ்' உளவு மென்பொருளை விற்க முயற்சியா? - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

Veeramani

பெகாசஸ் மென்பொருளை தயாரித்த என்.எஸ்.ஓ. நிறுவனம் அதை மேற்குவங்கத்தில் விற்க முயற்சித்ததாக, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு முன்பு மேற்குவங்க காவல்துறையை அணுகிய அந்நிறுவனம், 25 கோடி ரூபாய்க்கு மென்பொருளை விற்க முன்வந்ததாக கூறினார். இந்த தகவல் தனக்கு தெரியவந்தபோது, அது தேவையில்லை என்று கூறிவிட்டதாகவும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இதேபோல் ஆந்திரா உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் தனது பெகாசஸ் மென்பொருளை விற்பதற்காக என்.எஸ்.ஓ. நிறுவனம் அணுகியதாகவும் அவர் கூறினார்.



இந்தியாவில் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம், உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி அரசியல் தலைவர்கள்,பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை உளவுப்பார்த்ததாக கூறப்படும்  விவகாரம் கடந்த ஆண்டுமுதல் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த விவகாரம் காரணமாக நாடாளுமன்றத்திலும் பல முறை அமளி ஏற்பட்டுள்ளது.