கடும் அமளிக்கிடையே நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் திங்கள்கிழமை முடங்கிய நிலையில், பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மேலும், 'மத்திய அரசு இல்லையென்றால், வேறு யார் உளவு பார்த்தது' என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் அலைபேசிகள் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக ஊடகங்களில் சர்ச்சை வெடித்துள்ளது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் உருவாகியுள்ள உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள பலரது அலைபேசிகள் மத்திய அரசால் உளவுபார்க்கப்பட்டன என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி உள்ளிட்டோர் இதுகுறித்து ட்வீட்களில் கருத்து தெரிவித்துள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்து விரிவான விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும் என பல்வேறு எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மனோஜ் ஜா, காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் மற்றும் மஜ்லிஸ் கட்சியின் அசாதுதீன் ஓவைசி ஆகியோர் இந்தக் கருத்தை வலியுறுத்தி, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மக்களவையில் திங்கள்கிழமை மத்திய அரசு அளித்துள்ள விளக்கம், எதிர்க்கட்சிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் 'அரசு உளவு பார்க்கவில்லை என்றால், உளவு பார்த்தது யார்?' என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன. வெளிநாட்டைச் சேர்ந்த யாரேனும் உளவு பார்த்திருந்தால், அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும், கட்டாயம் விரிவான விசாரணை தேவை எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. உளவு பார்த்தது மத்திய அரசுதான் என்று தெளிவாக தெரிவதாகவும், விரிவான விசாரணை தேவை என்றும் மனோஜ் ஜா பேசியுள்ளார்.
'அலைபேசிகளை உளவு பார்த்து மத்திய அரசு என்ன சாதிக்கிறது?' என சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பினார். மக்களவையில் பேசிய மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தவறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும், மத்திய அரசு உளவு பார்க்கவில்லை என்றும் திட்டவட்டமாக மறுத்தார்.
உளவு பார்த்த நாடுகளின் பட்டியல் தவறு என சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் அமளிக்கிடையே விளக்கினார். லடாக் எல்லையில் உளவு பார்க்காமல், டெல்லியில் மத்திய அரசு உளவு பார்த்துள்ளது என ஓவைசி கண்டனம் தெரிவித்தார்.
இதற்கிடையே பத்திரிகையாளர்கள் சங்கங்கள் உளவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளன என இந்திய பிரஸ் கிளப் பதிவு செய்துள்ளது. இதுபோல எப்போதும் நடந்ததில்லை என்றும், தவறான உள்நோக்கத்துடன் உளவு பார்க்கப்பட்டுள்ளது என்றும் இந்திய பிரஸ் கிளப் குறிப்பிட்டுள்ளது.
- கணபதி சுப்பிரமணியம்