இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. குழுமத்தின் 'பெகாசஸ் ஸ்பைவேர்' மூலம் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்பட்டதாக புயல் கிளம்பியுள்ளது. இந்த ஸ்பைவேர் செயல்படுவது எப்படி?
இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. குழுமம் தயாரித்துள்து ஸ்பைவேர் பெகாசஸ். இதை பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது அந்நிறுவனம். ஸ்பைவேர் என்பது ஒருவருக்கு தெரியாமல் அவரை வேவு பார்க்கக்கூடிய மென்பொருள். இந்த ஸ்பைவேர் ஒருவரது ஸ்மார்ட்ஃபோனில் ஒரு தொடுதலும் இல்லாமலே ஊடுருவி தனிப்பட்ட தகவல்களை பார்க்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஃபோனில் இருக்கும் பக்ஸ் மூலம் பெகாசஸ் ஸ்பைவேர் உள்ளே நுழைந்து விடும் அல்லது இது காத்திருக்கும் லிங்க் எதையாவது ஒருவர் க்ளிக் செய்வதன் மூலமும் உள்ளே நுழைந்து விடும்.
ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் இயங்குதள ஃபோனில் நுழையும் பெகாசஸ் ஸ்பைவேர், ஃபோன் உரையாடல்களை ஒட்டுக் கேட்கவும், மெசேஜ்களை படிக்கவும் முடியும். ஃபோன் கேமரா மற்றும் மைக்கை அவருக்குத் தெரியாமலே இயக்கவும் முடியும். ஜிபிஎஸ்சை தானாகவே இயக்கி, நகர்வுகளை கண்காணிக்க முடியும். எண்ட் டூ எண்ட் என்க்ஸ்ரிப்ட் எனப்படும் குறியாக்கம் செய்த தகவலைக் கூட பெகாசஸ் பார்க்க முடியும்.
ஊடுருவ வேண்டிய செல்ஃபோனை அடையாளம் கண்டதும் இலக்குக்கு உரிய நபரை தனது முயற்சிக்கு வரவழைக்க வலைத்தள இணைப்பை அனுப்புவர். குறிப்பிட்ட நபர் அந்த லிங்க்கை க்ளிக் செய்ததும் அவரது ஃபோனில் பெகாசஸ் இன்ஸ்டால் ஆகிவிடும். அல்லது வாட்ஸ்அப் கால்களில் உள்ள Bug வழியாகவும் ஊடுருவல் நடைபெறும். மிஸ்டு கால் அனுப்பியும் இதை ஃபோனில் இன்ஸ்டால் செய்ய முடியும். பிறகு அழைப்பு பட்டியலில் இருந்து அந்த எண் நீக்கப்படுவதால், அதுபற்றி பயனருக்கு நடந்த விஷயம் தெரியாது.
பெகாசஸ் ஸ்பைவேர் புதிதல்ல. 2016ல் ஐஃபோன் பயனர்களை இது குறிவைப்பதாக கூறப்பட்டது. பிறகு 2019ல் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இதை உளவுபார்க்க பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. ஆனால், அப்போதும் அரசால் அந்த தகவல் மறுக்கப்பட்டது. பயங்கரவாத செயல்கள், சதித்திட்டம் தீட்டுபவர்களை உளவு பார்ப்பதற்காக மட்டுமே இந்த ஸ்பைவேரை உருவாக்கி நாடுகளுக்கு அளிப்பதாக என்.எஸ்.ஓ. நிறுவனம் கூறுகிறது.
பெகாசஸ் மூலம் மனித உரிமை மீறல்களில் அரசுகள் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவாதம் பெறுவதாகவும் கூறுகிறது என்.எஸ்.ஓ. இருந்தாலும் இன்னும் சில நாட்களுக்கு பெகாசஸ், ஒரு மெகாசைஸ் சர்ச்சைக்கு வித்திடும் என்பதில் ஐயமில்லை.