இந்தியா

ஆளுங்கட்சி-எதிர்க்கட்சிகள் பிடிவாதத்தால் முடங்கும் நாடாளுமன்றம்: முடிவுக்கு வருமா பெகாசஸ்?

ஆளுங்கட்சி-எதிர்க்கட்சிகள் பிடிவாதத்தால் முடங்கும் நாடாளுமன்றம்: முடிவுக்கு வருமா பெகாசஸ்?

JustinDurai
பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சியும் தங்களது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருப்பதால், முட்டுக்கட்டை முடிவுக்கு வருமா? எனக் கேள்வி எழுந்துள்ளது. அதேவேளையில், ஒட்டுக்கேட்பு சர்ச்சை தொடர்பான வழக்குகளை அடுத்த மாதம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
 
பெகாசஸ் சர்ச்சை... நாடாளுமன்றம் சுமார் 2 வாரத்திற்கு முடங்க காரணமான விவகாரம். மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னர் வீசத் தொடங்கிய புயல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோரது செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதை அவ்வளவு சாதாரணமான விசயமாக கடந்து போய்விட முடியாது என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.
 
இது தேச நலனுடன் உள்நாட்டு பாதுகாப்பும் சார்ந்த விசயம் என்பதால் மத்திய அரசின் விளக்கம் கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை என்று தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன, காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.
 
இவ்விவகாரம் தொடர்பாக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர், நாடாளுமன்ற இரு அவைகளிலும் விளக்கம் அளித்துவிட்டதால் அது இத்துடன் முடிந்துவிட்டதாகக் கூறுகிறது, மத்திய அரசு. விவாதிக்கக்கூடிய அளவுக்கு இது தீவிரமான பிரச்னை இல்லை என்றும் விளக்கமளிக்கிறது அரசு. எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியும் நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருப்பதால் நாடாளுமன்ற முடக்கம் முடிவுக்கு வருமா? எனச் சந்தேகம் எழுந்துள்ளது.
 
இதனிடையே, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பொதுநல மனுக்களை ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாரிக்க தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஒப்புதல் அளித்துள்ளார்.
 
அதே நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியிலும், நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இருக்கக் கூடிய பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி விவாதங்கள் எதையும் நடத்தாமல் தொடர்ந்து முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதனை ஜனநாயக விரோதப்போக்கு என மிகத் தீவிரமாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டித்து வருகின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் போய் தினமும் பதாகைகளுடன் நாடாளுமன்றத்தின் சபாநாயகர்களின் இருக்கைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காகிதங்களை கிழிப்பது உள்ளிட்வற்றை மேற்கொண்டு வருகின்றனர்.
 
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகளை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை சபாநாயகரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு ஆகிய இருவரும் கடுமையாக கண்டித்து வருகின்றனர். நேற்றைய தினம் கூட அலுவல்கள் எதுவும் பெரிய அளவில் நடைபெறாமல் திங்கட்கிழமைக்கு அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
இருப்பினும் பிரதமர் உரிய விளக்கத்தை அளிக்கும் வரை ஓயப்போவதில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முரண்டு பிடித்து வரும் நிலையில் அதற்கு சற்றும் இறங்கி வராமல் மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பதால் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவாதங்கள் நடைபெற வேண்டிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அவை எதுவும் நடைபெறாமல் வீணாகி வருகிறது.
 
இனி எதிர்பார்த்திருப்பது ஒன்றுதான். மத்திய அரசு இறங்கி வரவேண்டும் இல்லையென்றால் எதிர்க்கட்சிகள் விட்டுவிட வேண்டும். ஆனால் இரண்டும் நடைபெறுவதற்கான சாத்தியம் தற்போதைக்கு இல்லாத சூழல் தான் நிலவி வருகிறது.
 
-நிரஞ்சன்