இந்தியா

பெகாசஸ் விவகார விசாரணை: நிபுணர் குழு அமைக்க முடிவு - உச்ச நீதிமன்றம்

பெகாசஸ் விவகார விசாரணை: நிபுணர் குழு அமைக்க முடிவு - உச்ச நீதிமன்றம்

kaleelrahman

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தொழில்நுட்ப நிபுணர் குழுவை அமைக்க முடிவு செய்துள்ள உச்சநீதிமன்றம், அடுத்த வாரம் அதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கவுள்ளது.

நிபுணர் குழுவில் இணைய நினைத்திருந்த சிலர் தனிப்பட்ட காரணங்களால் குழுவில் இணைய மறுத்துவிட்டதால் குழுவை இறுதி செய்வது தாமதமாவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறினார். பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என தொடரப்பட்ட வழக்குகள் மீது அடுத்த வாரம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி கூறினார்.

பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி பலருடைய செல்போன்களும் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இவ்விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என மத்திய அரசு கூறினாலும் தேசிய பாதுகாப்பு கருதி பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து எந்த பிரமாண பத்திரமும் தாக்கல் செய்ய மறுத்துவிட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவுள்ளது.