இந்தியா

மயில் ஏன் தேசியப் பறவை?: அது செக்ஸ் வைத்துக் கொள்வதில்லை: நீதிபதி விளக்கம்

மயில் ஏன் தேசியப் பறவை?: அது செக்ஸ் வைத்துக் கொள்வதில்லை: நீதிபதி விளக்கம்

webteam

ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர ஷர்மா, மயில் ஏன் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது என்பதற்கு ஒரு வினோத விளக்கத்தை அளித்துள்ளார்.

ஆசியாவின் மிகச்சிறந்த பசு பராமரிப்பு மையம், 'ஹிங்கோனியா' ராஜஸ்தானில் உள்ளது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரை 8122 பசுக்கள் உடல்நலக்குறைவு மற்றும் காயங்களால், இந்த மையத்தின் பசுக்கள் உயிரிழந்துள்ளன என்று ராஜஸ்தான் அரசு அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டது. இது தொடர்பான வழக்கு, நேற்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி மகேஷ் சந்திர ஷர்மா, பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கினார். நேற்றுடன் ஓய்வு பெற்ற மகேஷ் சந்திர ஷர்மாவின் கடைசி வழக்கு இந்த பசு வழக்குதான். 'பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும். பசுவைக் கொன்றால், ஆயுள் தண்டனை விதித்து ராஜஸ்தான் அரசு சட்டம் இயற்ற வேண்டும்' என்று அறிவுறுத்திவிட்டு விசாரணையை முடித்தார்.

பசுவை ஏன் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நீதிபதி, 33 கோடி கடவுள்கள் பசுவினுள் வசிக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. பசு ஒரு மருத்துவமனையையே தனக்குள் கொண்டுள்ளது. ஆக்ஸிஜனை உட்கொண்டு மீண்டும் ஆக்ஸிஜனையே வெளியேற்றுவது பசு மட்டும்தான். கல்லீரல், இதயம் உள்ளிட்டவற்றை கோமியம் பாதுகாக்கும், கோமியம் குடிப்பதால் பூர்வ ஜென்ம பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும். மாடு, அதன் கொம்புகள் வழியாக, காஸ்மிக் சக்தியை (Cosmic energy) உறிஞ்சிவிடும். இதனால்தான் பசுவை தேசிய விலங்காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மயில் இந்தியாவின் தேசியப் பறவையாக இருப்பதற்கு காரணம் அது பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்கிறது. ஆண் மயில் பெண் மயிலுடன் உடலுறவு கொள்வதில்லை. ஆண் மயிலின் கண்ணீரால் மட்டுமே பெண் மயில் கருவுறுகிறது. எனவே மயில் புனிதத்தன்மை கொண்டது. அதனாலேயே மயில் இந்தியாவின் தேசியப் பறவையாக உள்ளது என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

- குணவதி