இந்தியா

"ஜெயலலிதாவின் இந்த திட்டத்தைதான் இப்போது பின்பற்றுகிறோம்"- பிடிஆர் பழனிவேல் ராஜன்!

"ஜெயலலிதாவின் இந்த திட்டத்தைதான் இப்போது பின்பற்றுகிறோம்"- பிடிஆர் பழனிவேல் ராஜன்!

webteam

2022 - 23 ஆம் ஆண்டு தமிழகத்தின் நிதி முன்னேற்றம் மிகச் சிறப்பாக இருக்கும் என பி டி ஆர் பழனிவேல் ராஜன் கூறியுள்ளார்.

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளிவீதியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம் மற்றும் கழிப்பறை கட்டடம் ஆகியவற்றை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2003 ஆம் ஆண்டில் இருந்து தம்ழிநாடு சிறப்பாக முன்னேறி உள்ளது. மொத்த கடன் 2003-ல் 28 சதவீதம் இருந்தது. தற்போது கடந்த 11 ஆண்டுகளில் 16 அல்லது 17 சதவீதம் அது குறைந்துள்ளது. இதேபோல் வருமானத்தில் 21 சதவீதம் வட்டி கட்ட வேண்டிய இடத்தில், தற்பொழுது 11 சதவீதம் மட்டுமே கட்ட வேண்டி உள்ளது. இந்த நிதி உதவியும் முழுமையாக மத்திய அரசு வழங்குவதில்லை. தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து தான் பல்வேறு நல திட்டங்களை மக்களுக்கு செய்கிறது.

நடப்பாண்டில் எப்படி நிதி நிலை முன்னேற்றத்தில் சிறப்பாக இருக்கிறதோ, அதேபோல் 2023 நிதி ஆண்டும் சிறப்பான முன்னேற்றத்தில் இருக்கும் என நான் நம்புகிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்ட `2023 தொலைநோக்கு பார்வை திட்டத்தின்’ கீழ் சில வியூகங்களை அவர் செய்திருந்தார். அந்த திட்டம் சிறப்பான திட்டம் என்பதனால் அதையே நாங்கள் இப்போதும் பின்பற்றுகிறோம். இதன் அடிப்படையில் தற்போது தமிழ்நாட்டில் ஆண்டு வருமானம் 24 லட்சம் கோடி எதிர்பார்க்கிறோம். வரும் ஆண்டில் ஒரு லட்சத்து முப்பதாயிரம் கோடி ரூபாய் தமிழகத்தில் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது. கொரோனா நோய் தொற்றுக்கு முன்பு தமிழகத்தின் ஆண்டு முதலீடு முப்பதாயிரம் கோடியை தாண்டவில்லை. ஆனால் தற்போது நடப்பாண்டு தமிழகத்தின் முதலீடு 44 கோடி ரூபாய் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

அனைத்து துறை அதிகாரிகளும் செயல் திறனை அதிகரிக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக நிதி தடை இருந்தது. நிதி மேலாண்மை சட்டத்தின் கீழ் வரவு கணக்கில் செலவு செய்ய வேண்டும்” என்றார்.