பேடிஎம் ட்விட்டர்
இந்தியா

Today..Tomorrow..Always! சர்ச்சைகளுக்கு நடுவே ’எப்போதும் செயல்படும்’ என Paytm மெகா விளம்பரம்!

Paytm பணப் பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ள நிலையில், அதன் நிறுவனர், ’எப்போதும் செயல்படும்’ என இன்று நாளிதழ்களில் விளம்பரம் செய்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.

Prakash J

செல்போன் வாயிலாக பணப் பரிவர்த்தனைக் கொண்டிருக்கும் செயலிகளில் ஒன்றான Paytmக்கு KYC தொடர்பான சிக்கல்கள் அதிகரித்து வருவதால், அவர்கள் வாலட் வணிகத்தில் 2022க்கு முன்பு இருந்த நிலை தற்போது இல்லை எனவும், ரிசர்வ் வங்கியின் கட்டமைப்புகளைத் தாண்டி ஒரே பான் எண்ணில் பல பேடிஎம் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தவுடன் இந்திய ரிசர்வ வங்கி அதன் கடன் பரிவர்த்தனைக்கு உடனடியாக தடை விதித்திருந்தது. பிப்ரவரி 29 முதல் புதிய வைப்பு நிதி பெறவோ, கடன் பரிவர்த்தனை மேற்கொள்ளவோ இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்தது. பிப்ரவரி 29ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில், அது மார்ச் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பின்னர் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இதுகுறித்து ரிசர்வ வங்கி, “மார்ச் 15ஆம் தேதிக்குப் பிறகு பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் கணக்கில் மேற்கொள்ளப்படும் டெபாசிட் பரிவர்த்தனைகள், ஃபாஸ்டாக் போன்ற எந்தஒரு சேவையும் செல்லுபடியாகாது. மேலும், வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த காலஅவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே மார்ச் 15ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்களின் கணக்குகளை வேறு வங்கிகளுக்கு மாற்றிக்கொள்ளவும்” என்று அறிவுறுத்தியிருந்தது.

இதையடுத்து, பேடிஎம் நிறுவனத்தின் FASTag பரிவர்த்தனையை தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் ரத்துசெய்துள்ளது. FASTag சேவை வழங்கும் வங்கிகளின் பட்டியலில் இருந்து பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியை நீக்கியதால் அதன்மூலம் வாங்கப்பட்ட FASTag இனி செல்லாது எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் சுமார் 2 கோடி பேர் வேறு வங்கிகளில் இருந்து புதிய ஸ்டிக்கர்களை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Paytm செயல்பாடுகள் குறித்து அனைவரும் கவலையில் உள்ள நிலையில், அதன் நிறுவனரான விஜய் சேகர் ஷர்மா தனது எக்ஸ் தளத்தில், ’இந்தியாவின் ஒவ்வொரு Paytm QR இன்று, நாளை, எப்போதும் தொடர்ந்து செயல்படும்’ எனத் தெரிவித்து, நாளிதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட அதன் விளம்பரத்தையும் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பான விளம்பரங்கள் இன்று (பிப்.19) சில நாளிதழ்களின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ‘ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களுக்கு எதிரான எந்த முடிவும் விரிவான மதிப்பீட்டிற்கு பிறகே எடுக்கப்படும். ரிசர்வ் வங்கி ஃபைன்டெக் துறைக்கு ஆதரவாக உள்ளது என்பதை வலியுறுத்தும் அதேவேளையில், வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதோடு நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதிலும் அது உறுதியாக இருப்பதாகவும், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாததாகக் கருதப்படும் எதையும் ரிசர்வ் வங்கி உடனடியாக தடுக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி நெருக்கடிக்கு மத்தியில், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், Paytm Payments Bank (PPBL)க்கு எதிரான மத்திய வங்கியின் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய முடியாது என்று நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்திருந்தார். இந்த நிலையில், Paytm நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா இப்படியொரு விளம்பரத்தைச் செய்திருப்பது வணிக உலகில் மீண்டும் விவாதிக்கப்பட்டு வருகிறது.