viral image x page
இந்தியா

“உங்கள் மகன் சிறுமியை..”-சைலேந்திரபாபு படத்தை வைத்து மோசடி கும்பல் விரித்த வலை! மடக்கிய மும்பை நபர்!

Rajakannan K

மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கு வாட்ஸ் அப் கால் ஒன்று வந்துள்ளது. அது ஒரு மோசடி முயற்சிக்கான போன் கால். தங்களை போலீஸ் என்று அறிமுகம் செய்துகொண்டு மோசடிக் கும்பலை சேர்ந்தவர்கள் பேசத் தொடங்கினர். அந்த கால் வரும் எண்ணில் தமிழ்நாடு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் படம் டிஸ்பிளே ஆனது.

போன் செய்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், “உங்களுடைய மகன் என்ன செய்திருக்கிறார் தெரியுமா. உங்களுடைய மகனும் அவருடைய நண்பர்கள் மூவரும் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.. விஷயம் மிகவும் சீரியஸாக இருக்கிறது” என்று சொல்கின்றனர். ஆனாலும், தன் மகன் ஆபத்தில் சிக்கிவிட்டாரோ என்ற எந்த பதற்றமும் இல்லாமல் அந்த நபரும் தெளிவாக மற்ற விவரங்களை கேட்கிறார்.

model image

“என்னுடைய மகனை பேசச் சொல்லுங்கள்” என்று அவர் கேட்கிறார். அதற்கு போனின் பின்புலத்தில் அவரது மகன் பெயரான ஆயுஷ் என்பதை சொல்லி அழைக்கும் சத்தம் கேட்கிறது. மேலும் சற்றே சலசலப்பான சத்தமும் அழுகுரலும் கேட்கிறது.

பின்னர், “உன்னுடைய மகன் அழுதுகொண்டே இருக்கிறார்; இங்கே மீடியா எல்லாம் இருக்கிறார்கள். அதனால் வெளியே தெரிந்து பிரச்னை ஆகிவிடும்” என்று மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிக்க: உத்தரகாண்ட்| கோயிலில் டிரம்ஸ் வாசிக்க மறுப்பு: பட்டியலின குடும்பங்களை ஊரைவிட்டே ஒதுக்கிய கொடூரம்!

அப்படியென்றால், “நீங்கள் எந்த போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்; நான் வருகிறேன்” என்று அந்த தந்தை கூறுகிறார்.

உடனே, “இல்லை.. நாங்கள் போலீஸ் ஸ்டேஷனில் இல்லை; சம்பவம் நடந்த குடோன் பகுதியில் இருக்கின்றோம்.. இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் உங்கள் மகனது வாழ்க்கை பாதிக்கப்படும். அதனால் வெளியே தெரியாமல் முடித்துக் கொள்ளலாம். இன்னும் எஃப்.ஐ.ஆர்.கூட பதிவு செய்யவில்லை” என்று சொல்கின்றனர்.

model image

உடனே, “இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்” என்று அவர் கேட்கிறார்.

“நாங்களும், இங்க நாலும் போலீஸ் இருக்கோம். பார்த்து பண்ணுங்க.. கேஸ் இல்லாம முடிச்சிக்கிடலாம்.. ஜிபே (Gpay) கூட இருக்கு” என்று மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர் சொல்கிறார்.

இதையும் படிக்க: ”பிறந்தால் ஒருநாள் சாகத்தான் வேண்டும்” - ஹாத்ரஸ் சம்பவம் குறித்து போலே பாபா சர்ச்சை பேச்சு!

“எவ்ளோ வேணும் சொல்லுங்க” என்று அவர் சொன்னதும், “நாங்கள் 4 பேர் இருக்கோம். ஆளுக்கு 10 ஆயிரம் ரூபாய் என 40,000 அனுப்புங்கள்” என்று மோசடிக் கும்பலைச் சேர்ந்த நபர் சொல்கிறார்.

உடனே, இளைஞரின் தந்தை, “ஆளுக்கு 10 ஆயிரம் போதுமா.. ஏன் ஆளுக்கு ஒரு லட்சம் ரூபாய் கேட்கலாமே..” என்று கேட்ட உடனே போன் கட் ஆகிவிடுகிறது.

model image

இந்த போன் கால் முழுவதை அவர் வாய்ஸ் ரெக்கார்டு செய்ததுடன் வீடியோவையும் ரெக்கார்டு செய்துள்ளார். அத்துடன் இணையத்திலும் அவர் இதனை பதிவு செய்துள்ளார். +92 ISD கோடில் இருந்து வந்த அந்த போன் நம்பர் பாகிஸ்தானைச் சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது. இதன்மூலம் இந்த நம்பரில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம் என மும்பை காவல் துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து மும்பை காவல் துறை, “இத்தகைய செயலை வெளியுலகுக்குக் கொண்டுவந்தமைக்கும் மக்களிடம் விழிப்புணர்வுக்கு ஏற்படுத்தியமைக்கும் பாராட்டுகள். இதுபோன்ற அழைப்புகளை மக்கள் ஏற்க வேண்டாம். ஒருவேளை, மோசடி அழைப்புகள் வந்தால், உங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாராக அளிக்கவும்” எனத் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் புகைப்படத்தை பயன்படுத்தியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: விவாகரத்து பற்றிய இன்ஸ்டா பதிவு.. லைக் செய்த அபிஷேக் பச்சன்.. வதந்திகளுக்கு மறைமுக பதில்?