சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை, மக்களவை தேர்தலில் போட்டியிடுவோம் என நடிகரும், ஜனசேனா கட்சித்தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சில மாதங்களுக்கு முன்னர் சட்டமன்றத்தை கலைத்தார். இதனால் மக்களவைத் தேர்தலுடன் நடைபெறவிருந்த அம்மாநில தேர்தல், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 4 மாநில தேர்தல்களுடன் சேர்த்து நடத்தப்படவுள்ளது. தெலுங்கானாவின் சட்டசபைத் தேர்தலில் களம் காணலாம் என திட்டமிட்டிருந்த பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு இது சிக்கலை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அக்கட்சியின் நிர்வாகிகளுடன் இன்று பவன் கல்யாண் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், மக்களவை தேர்தலில் கவனம் செலுத்தி களம் காணப்போவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பவன், “ஜனசேனா கட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் சட்டசபையை முன்னதாகவே கலைத்துவிட்டார்கள். இதனால் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறவிருப்பதால், அதில் நாங்கள் போட்டியிடுவது கடினம். அதற்கு நாங்கள் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. இதனால் நாங்கள் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம் என முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.