இந்தியா

பவன் கல்யாண் திரட்டிய பேரணியில் 10 லட்சம் பேர் பங்கேற்பு

webteam

நடிகரும், ஜனசேனா என்ற அமைப்பின் தலைவருமான பவன் கல்யாண் நடத்திய பேரணியில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகரும், ஜனசேனா என்ற அமைப்பின் தலைவருமான பவன் கல்யாண், இன்றைய அரசியல் குறித்து இளைய தலைமுறையினர் உரிய விழிப்புணர்வு பெறவேண்டும் என்ற நோக்கத்தில் லட்சக்கணக்கானவர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணியை கடந்த 16ம் தேதி நடத்தினார்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டன் பரேஜ் என்ற பாலத்தின் வழியாக இந்தப் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் தங்களின் கைகளை உயர்த்தியபடி, அரசியல் விழிப்புணர்விற்கான கோஷங்களை எழுப்பினர். அத்துடன் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜனசேனாவின் தலைவரான பவன் கல்யாணை வரவேற்றனர். கடுமையான கூட்டத்தால் இந்தப் பேரணியில் கலந்து கொண்ட பவன் கல்யாண், மேடைக்கு செல்லவே மூன்று மணி நேரம் ஆனது. அப்போது ஏராளமானவர்கள் பவன் கல்யாணைப் பார்த்து ‘வருங்கால முதல்வர் வாழ்க!’ என கோஷத்தை எழுப்பினர்.  அவர்களை பார்த்து கைவிரல்களை மடக்கி, உயர்த்தி ‘வெல்வோம், மாற்றத்தைக் கொண்டு வருவோம்.’ என்று சைகையும் காட்டினார் பவன் கல்யாண். 

இந்நிலையில் பவன் கல்யாண் நடத்திய இப்பேரணியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற இந்தப் பேரணியில் விஜ்ஜேஸ்வரம் பகுதியில் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். வேமாகிரி, ராவுலபலேம் பகுதியில் 3 லட்சத்திற்கும் அதிகமானார் கலந்து கொண்டனர் என்றும், ‌மேற்கு கோதாவரி பகுதியில் ஒன்றரை லட்சம் பேர் பேரணியில் பங்கேற்றனர் என தெரியவந்துள்ளது. இவை இல்லாமல் பல்வேறு பகுதிகளில் 3 லட்சம் பேர் என மொத்தம் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பேரணியில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.