பவன் கல்யாண் web
இந்தியா

திருப்பதி கோவில் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பவன் கல்யாண் மகள்! இதுதான் காரணம்?

கோவிலின் விதிகளின் படி கடவுளை நம்புவதாக பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பிறகு பவன் கல்யாண் மகள் சாமி தரிசனம் செய்துள்ளார்.

Rishan Vengai

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாத நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்டு 11 நாட்கள் பரிகார விரதத்தை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தொடங்கியிருந்தார். ஆந்திர மாநிலம், குண்டூரில் உள்ள தசாவதார வெங்கடேஸ்வர சாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து பவன் கல்யாண் தனது விரதத்தை தொடங்கி கடைபிடித்தார்.

பவன் கல்யாண்

இந்நிலையில் விரதத்தின் கடைசி நாள் என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த பவன் கல்யாண் சாமி தரிசனம் செய்தார். அவருடன் சேர்ந்து அவருடைய மகள்களான ஆத்யா கொணிடேலா, பலினா அஞ்சனி கொணிடேலா ஆகியோரும் கோயிலில் வழிபாடு செய்தனர். உடன் தெலுங்கு திரை இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ், கலை இயக்குநர் ஆனந்த் சாய் ஆகியோரும் தரிசனம் செய்தனர்.

அப்போது கோவிலிற்குள் சென்று சாமி தரிசனம் செய்வதற்காக பவன் கல்யாணின் இளைய மகளான போலினா அஞ்சனி கொனிடேலா கடவுள் நம்பிக்கை பிரகடனத்தில் கையெழுத்திட்டார். மகள் மைனர் என்பதால் உடன் பவன் கல்யாணும் சேர்ந்து கையெழுத்திட்டார்.

எதனால் கையெழுத்திட்டார்? என்ன காரணம்?

பவன் கல்யாணின் இளைய மகளான பலினா அஞ்சனி கொணிடேலா, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குள் செல்வதற்கு முன்பு, வெங்கடேஸ்வர பெருமாள் மீது, தாம் நம்பிக்கை கொண்டவர் என்று உத்தரவாதம் அளித்து, திருக்கோயில் கையேட்டில் கையெழுத்திட்டார்.

பலினா அஞ்சனி கொணிடேலா இந்து மதத்தை சேராதவர் என்பதால், திருப்பதி கோயிலுக்குள் செல்வதற்கு முன்னதாக, அவரிடம் இருந்து உத்தரவாதம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிலின் விதிகளின்படி, இந்துக்கள் அல்லாதவர்கள் மற்றும் வெளிநாட்டினர் கோவிலுக்குச் செல்வதற்கு முன் தெய்வத்தின் மீதான நம்பிக்கை பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும். பவன் திருமணம் செய்துகொண்ட அன்னா லெஷ்னேவாவின் மகளான போலினா வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர் என்பதாலும், இந்து அல்லாதவர் என்பதாலும் கோவில் நிர்வாக அதிகாரிகள் கொடுத்த கையேட்டில் கையெழுத்து போட்டார். மகள் மைனர் என்பதால், பவன் கல்யாணும் ஆவணங்களில் கையெழுத்திட்டார்.