யோகா குருவான பாபா ராம்தேவ், ‘பதஞ்சலி’ என்ற பெயரில் ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்து வருகிறார். மேலும் இந்த நிறுவனத்தின் தலைவராகவும் அவர் உள்ளார். ஆயுர்வேத துறையில் பிரபலமான நிறுவனமாக விளங்கும் ’பதஞ்சலி’ தம் தயாரிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்க்கவும், பிரபலப்படுத்தவும் தவறான மற்றும் முறைகேடான விளம்பரங்களை வெளியிடுவதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெறுவதைத் தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. குணப்படுத்தவே வாய்ப்பில்லாத பல்வேறு நோய்களையும், பதஞ்சலி தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என அந்நிறுவனம் உண்மைக்கு மாறாக விளம்பரம் செய்வதாக இந்திய மருத்துவ சங்கம் குற்றம்சாட்டியது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ’விளம்பரங்களில் தவறான தகவலைத் வெளியிடக்கூடாது’ என பாபா ராம்தேவை எச்சரித்ததுடன், ’இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும்’ எனவும் அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதற்கிடையே, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, அமானுல்லாஹ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக கடந்த மார்ச் 19ஆம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது, ’உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு பாபா ராம்தேவ் தரப்பு பதிலளிக்கவில்லை. விசாரணைக்கு ஒருநாள் முன்னதாகத்தான் பதில் மனுத் தாக்கல் செய்தது’ என சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பாபா ராம்தேவ் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது எனக் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையின்போது பாபா ராம்தேவ், நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா இருவரும் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் இன்று தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், "எதிர்காலத்தில் இதுபோன்ற விளம்பரங்கள் வெளியிடப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறோம். ஆயுர்வேத நிறுவனத்தின் தயாரிப்புகளை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ இந்த நாட்டின் குடிமக்களை ஊக்குவிப்பதே தங்களின் நோக்கம்" என பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா உறுதி அளித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணைக்காக ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகிய இருவரும் ஏப்ரல் 2ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.
முன்னதாக கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் செய்தியாளர்களிடம் பேசிய பாபா ராம்தேவ், “பதஞ்சலி தயாரிப்புகள் குறித்து நாங்கள் பொய் பிரச்சாரம் செய்யவில்லை. அவ்வாறு இருப்பின் எங்கள் தயாரிப்புகளுக்கு ரூ.1 கோடி என்ன... ரூ1000 கோடி அபராதம் போடுங்கள். நாங்கள் பொய்யர்கள் எனில் மரண தண்டனை கொடுங்கள். ஆனால் நாங்கள் பொய் சொல்லவில்லை. பதஞ்சலி மற்றும் பாபா ராம்தேவ்க்கு எதிராக மருத்துவர்கள் குழு ஒன்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாபாவின் பதஞ்சலி நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியிருப்பது பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது. இதையும் படிக்க: AIமூலம் எடிட்; வைரலான இத்தாலி பெண் பிரதமரின் ஆபாச டீப்பேக் வீடியோ! 100000 யூரோ நஷ்டஈடு கேட்டு வழக்கு