இந்தியா

தோல்விகளுக்கு கட்சித் தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும் - நிதின் கட்கரி

தோல்விகளுக்கு கட்சித் தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும் - நிதின் கட்கரி

webteam

5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு கட்சி தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

5 மாநில தேர்தலில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று பாஜகவை தோற்கடித்தது. மற்ற 2 இடங்களிலும் மாநில கட்சிகளே வெற்றி பெற்றன. இதனால் பாஜகவின் அலை ஓய்ந்துவிட்டது என பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் இது வெற்றிகரமான தோல்வி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்து வந்தார். 

இந்நிலையில், புனேயில் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் சங்கம் லிமிடெட் சார்பாக நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “ஒரு வெற்றி கிடைத்து விட்டால் அதற்கு தான்தான் காரணம் என பலர் போட்டி போடுகின்றனர். ஆனால் தோல்வி அடைந்துவிட்டால் யாரும் பொறுப்பேற்க முன்வருவதில்லை. ஒருவருக்கொருவர் கைகாட்டிக் கொள்கின்றனர்.

எவர் ஒருவர் தோல்விக்கும் பொறுப்பேற்கிறாரோ அவரே தலைமை வகிக்க வேண்டும். அவ்வாறு தோல்விகளுக்கு பொறுப்பேற்கும் வரை தலைவர்கள் கட்சிக்கு உண்மையுடன் இருப்பதாக ஏற்க முடியாது. பாஜக ஆட்சியில் இருக்கும்போது, காங்கிரசுக்கு எதிராக விசாரணை நடத்தப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது பாஜகவுக்கு எதிராக விசாரணை நடத்தப்படுகிறது. நாடு மிகவும் மோசமாகி விட்டது. நன்றாக வேலை செய்யும் ஒரு நபரை ஆதரிக்க வேண்டும். மோசமாக வேலை செய்யும் நபருக்கு தண்டனை வழங்க வேண்டும். அவர் நமக்கு வேண்டியவராக இருந்தாலும் சரி” என பேசினார். 

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை மத்திய அமைச்சர் ஒருவரே விமர்சித்திருப்பது மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.