காங்கிரஸ் ட்விட்டர்
இந்தியா

’எதுக்கு தேர்தல நடத்திகிட்டு.. ஜனநாயகமா இது’-கட்சி வங்கி கணக்குகள் முடக்கம்; காங். தலைவர்கள் ஆதங்கம்

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை நிதிரீதியாக முடக்க பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் முயற்சிப்பதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

Prakash J

காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம்

மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், தேசிய காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸின் வங்கிக்கணக்குகளை வருமான வரித் துறை முடக்கியது. காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது குறித்து கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி அக்கட்சியின் பொருளாளர் அஜய் மாக்கன் தெரிவித்திருந்தார். 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரியைத் திரும்பச் செலுத்துவதில் 45 நாட்கள் காலதாமதம் ஏற்பட்டதால் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதுடன் ரூ.210 கோடி அபராதம் செலுத்த உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ்

இதுகுறித்து மேலும் அவர், காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நன்கொடை அளிக்கும் வகையில் உள்ள எங்களின் கிரவுட் ஃபண்டிங் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸின் கணக்கு முடக்கம் மட்டுமல்ல, ஜனநாயகத்தை முடக்குவதற்குச் சமம். வங்கிக் கணக்கை முடக்கியிருப்பதற்கு எதிராக, வருமான வரித் துறை ஆணையத்தில் மேல்முறையீடு செய்வோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: உச்சகட்ட பரபரப்பில் டெல்லி: ED அதிகாரிகள் சோதனைக்கு பின் முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் அதிரடி கைது!

’இது இந்திய ஜனநாயகத்தின் மீது ஆழமான தாக்குதல்’!

இதுகுறித்து அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ”இது இந்திய ஜனநாயகத்தின் மீதான ஆழமான தாக்குதல். பாஜக வசூலிக்கும், அரசியல் சட்டத்திற்குப் புறம்பான பணத்தை அவர்கள் தேர்தலுக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால் கட்சிக்காக கஷ்டப்பட்டு திரட்டப்பட்ட எங்கள் நிதிக்கு சீல் வைக்கப்படும். இதனால்தான், எதிர்காலத்தில் தேர்தலே வராது என கூறுகிறோம். இந்த நாட்டில் கட்சி அமைப்பு, ஜனநாயகத்தைப் பாதுகாக்க நீதித் துறையிடம் வேண்டுகோள் வைக்கிறோம். இந்த எதேச்சதிகாரத்துக்கு எதிராக களத்தில் இறங்கி கடுமையாக போராடுவோம்” எனத் தெரிவித்திருந்தார்.

ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே

அதேபோல் அப்போது கருத்து ராகுல் காந்தி, “பிரதமர் மோடி பயப்பட வேண்டாம். காங்கிரஸ் என்பது பணப் பலத்தின் பெயர் அல்ல... மக்கள் பலத்தின் பெயர். சர்வாதிகாரத்தின் முன் நாங்கள் ஒருபோதும் பணிந்ததில்லை, தலைவணங்கவும் மாட்டோம். இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்க காங்கிரஸ் போராடும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: ’1 லட்சம் தராவிட்டால் கிட்னி விற்கப்படும்’- இந்திய மாணவர் கடத்தல்; அமெரிக்காவில் தொடரும் சம்பவங்கள்!

இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த காங்.தலைவர்கள்!

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர், டெல்லியில் இன்று (மார்ச் 21) கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகளை முடக்கி, மோசமான விளையாட்டை மத்திய பாஜக அரசு ஆடி வருகிறது. இதனால், தேர்தலில் போட்டியிடுவதற்கான சமமான களம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது” என்றார்.

பின்னர் பேசிய சோனியா காந்தி, ”காங்கிரஸ் கட்சியை நிதிரீதியாக முடக்க பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முயற்சிக்கிறது” எனக் குற்றஞ்சாட்டினார். ”இந்த பிரச்னை இந்திய தேசிய காங்கிரஸை மட்டுமல்லாமல் ஜனநாயகத்தையும் பாதிக்கிறது” எனத் தெரிவித்த சோனியா காந்தி, ”முதன்மை எதிர்க்கட்சியின் மீதான இந்த தாக்குதல் நியாயமான தேர்தலுக்கும், ஜனநாயக நடைமுறைக்கும் விரோதமாக உள்ளது” என சாடினார்.

முன்னதாக பேசிய ராகுல் காந்தி, ”காங்கிரஸ் கட்சி மீது பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் குற்றவியல் நடவடிக்கையை எடுத்துள்ளனர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்ற கூற்று பொய்யாகியுள்ளது. தேர்தலில் தங்களை நிலைகுலைய வைக்கும் எண்ணத்தில், வேண்டுமென்றே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனக் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிக்க: ’பொய் விளம்பரம்’ - பகிரங்க மன்னிப்பு கேட்ட பதஞ்சலி.. அன்று ஆவேசமாய் பாபா ராம்தேவ் பேசியது என்ன?!